புதுச்சேரி மேட்டுப்பாளையம், வில்லியனூர் பகுதிகளில் வெடிகுண்டுகள், வீ்ச்சரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். பட்டா கத்தியுடன் ரகளை செய்த 3 பேரும் பிடிபட்டனர். புதுச்சேரி அடுத்த சண்முகபுரம் வெள்ளவாரி வாய்க்கால் பகுதியில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்து சதித் திட்டத்தில் ஈடுபடுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து காவல் உதவிஆய்வாளர்கள் கலையரசன், புனித்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு அதிரடியாக சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோட முயன்றது.
அந்த கும்பலை சேர்ந்த 7 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். 4 பேர் தப்பி ஓடினர். வெடிகுண்டு, வீச்சரிவாள் பிடிபட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி, வீச்சரிவாள்கள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சண்முகபுரம் பாரதிபுரத்தை சேர்ந்த அய்யனார் (வயது 26), சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் நகரை சேர்ந்த விஸ்வநாதன் (21), திலாசுப்பேட்டை வீமன் நகரை சேர்ந்த அகிலன் (27), முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்த சந்துரு (22), திலாசுப்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த சசி என்ற சசிகுமார் (20), சண்முகபுரம் நெசவாளர் குடியிருப்பைச் சார்ந்த சதீஷ் (20), கோரிமேடு காமராஜர் நகரை சேர்ந்த ஆனந்தகுமார் (20) என தெரியவந்தது.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சண்முகபுரத்தைச் சேர்ந்த ரவுடிகளான மார்ட்டின், அவரது சகோதரர் ஏசுராஜ் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இவர்களின் எதிரியான அதே பகுதியைச் சேர்ந்த ஜாண்டியின் கூட்டாளி பிரசாத்தை கொலை செய்ய பதுங்கி இருந்தது அம்பலமானது. சதி திட்டம் தீட்டியவர்களில் மார்ட்டின், அவரது சகோதரர் ஏசுராஜ், பூபதி, அமீர்கான் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் அகிலன், சந்துரு ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி வேல்முருகன் என்பவரின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேல்முருகனின் மகன் சிவப்பிரியன், ஜாண்டியின் கூட்டாளியான பிரசாத்துடன் நெருங்கி பழகி வந்ததால் ஆத்திரமடைந்து காரை அவர்கள் எரித்ததும் விசாரணையில் தெரியவந்தது. வில்லியனூர் அருகே உள்ள கோபாலன் கடை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கின் மறைவான இடத்தில் பதுங்கி இருந்த கும்பலை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் இருந்து வீச்சரிவாள், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான பட்டாசு மருந்து, நூல்கண்டு, இரும்புதுகள், ஆணி, கூழாங்கற்கள், இரும்பு நட்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்ததில், அவர்கள் கோபாலன் கடை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முருகன் மகன் குமார் என்ற கலைகுமார் (21), சசிகுமார் மகன் சதீஷ் (21), வாழப்பட்டாம்பாளையம் கிருஷ்ணமூர்த்தி மகன் பிரகாஷ் என்ற ஜெயப்பிரகாஷ் (25), அம்மா நகரை சேர்ந்த வேல்முருகன் மகன் சுரேஷ் (21), கோபாலன் கடை வாய்க்கால் வீதியை சேர்ந்த ஜெயபால் மகன் தீனா என்ற யுவராஜ் (21), பால்ராஜ் மகன் சதீஷ்குமார் (24) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரித்தில், கலைகுமாருக்கும், அந்த பகுதியை சேர்ந்த ரவுடிக்கும் முன்பகை இருந்து வந்தநிலையில் அவரை கொலை செய்ய தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெடிகுண்டு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து கலைகுமார் உள்பட 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேட்டுப்பாளையம் லாரி நிறுத்தும் இடத்தில் 3 பேர் கத்தியுடன் ரகளையில் ஈடுபடுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ரகளையில் ஈடுபட்டிருந்த ஆசாமிகள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர்கள் சண்முகபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன், முகிலன், நிஷாந்த் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கைதான 3 பேர் மீதும் ஏற்கனவே கொலை, அடிதடி, கத்தியை காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.