திருநெல்வேலியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த போலீஸ் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் குற்றங்களை தடுக்கக்கூடிய காவல்துறையில் பணியாற்றுபவரே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நெல்லையில் நடைபெற்றுள்ளது. 


தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். 45 வயதான இவர் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நெல்லை புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதுதொடர்பாக  தலைமை காவலர் ராஜகோபாலை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், கடந்த மார்ச் 5 ஆம் தேதி ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தார். 


இதற்கிடையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார், சிறுமிக்கு தலைமை காவலர் ராஜகோபால் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்தனர். அவர் மீதான வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணை நடத்தி ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்ணுக்கு பாலியல் தொல்லை - நீக்கப்பட்ட பாஜக பிரமுகர் 


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெண் சமையலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடேஸ்வரன் கட்சியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவரை மகுடேஸ்வரன் சமையல் பொருட்களை சரி பார்க்க வேண்டும் என கூறி அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த நிலையில் மகுடேஸ்வரன் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறார்.