தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் புதியதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் வார்டு மறுவரையறை காரணமாக நடத்தப்படாமல் இருந்தது இந்த நிலையில் இந்த மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Continues below advertisement



இந்த நிலையில் ஆரோவில் அடுத்த பெரிய முதலியார் சாவடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சோதனைச் சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த பொலிரோ கார் நிறுத்தி வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். வாகன சோதனையில் வாகனத்தில் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூபாய் 11 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்ரமணியன் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முறுக்கேறி பகுதியைச் சேர்ந்த தவமணி (வயது 32) என்பவர் இவர் விவசாய உரம் மற்றும் மருந்து விற்பனை கடையை நடத்தி வருவது தெரியவந்தது. இந்த நிலையில் ரூபாய் 11 லட்சத்தை எவ்வித ஆவணங்கள் இன்றி எடுத்து வந்ததை பறிமுதல் செய்தனர்.



 


திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை பகுதியில் பறக்கும் படை சோதனையில் ரூ 2 லட்சம் சிக்கியது:


திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரத்தில் தாசில்தார் ஜெயலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வந்த விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த இப்ராஹிம் (வயது 48) எந்தவித ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 900 வைத்திருந்ததை கண்டு பிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் சாம்ராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.


அதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே திருவெண்ணெய்நல்லூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்த உலகரட்சகன்(வயது 21) என்பவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.77 ஆயிரம் வைத்திருந்ததை கண்டுபிடித்த பறக்கும்படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து உளுந்தூர்பேட்டை ஒன்றிய தேர்தல் நடத்தும் அதிகாரி சீனுவாசனிடம் ஒப்படைத்தனர்