சென்னையை அடுத்த பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இதுமட்டுமின்றி, அந்த பகுதியில் பேப்பர் போடும் பணியிலும் கிருஷ்ணசாமி ஈடுபட்டு வருகிறார். பால் வியாபாரம் மற்றும் பேப்பர் வியாபாரம் மூலமாக அவருக்கு கிடைத்த வருமானத்தை, பாலவாக்கத்தில் உள்ள ஒரு வங்கியில் தனது பெயரில் சேமித்து வந்துள்ளார்.




இந்த நிலையில்,கிருஷ்ணசாமிக்கு அவசர பணத்தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், ஓரிரு தினங்களுக்கு முன்பு பாலவாக்கத்தில் உள்ள அந்த வங்கியில் இருந்து தனது சேமிப்பில் இருந்து ரூபாய் 1.50 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். பின்னர், பணத்தை வங்கியில் இருந்து வெளியே எடுத்து வந்த அவர் ரூபாய் 1.50 லட்சத்தையும், தனது இருசக்கர வாகனத்தின் டிக்கி எனப்படும் இருக்கைக்கு கீழே உள்ள இடத்தில் பணத்தை வைத்துள்ளார்.


வண்டியில் இருந்த பணத்துடன் கிருஷ்ணசாமி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வரும் வழியில் பிரியாணி கடை ஒன்று இருந்துள்ளது அதைப்பார்த்த கிருஷ்ணசாமிக்கு பிரியாணி சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்ற யோசனை வந்துள்ளது. உடனே, பிரியாணி கடையின் பார்க்கிங்கிற்கு சென்று, தனது இருசக்கர வாகனத்தை அங்கே நிறுத்தியுள்ளார். பின்னர், கடையின் உள்ளே சென்று பிரியாணி சாப்பிட்டுவிட்டு மீண்டும் தனது வாகனத்தை எடுக்க வந்துள்ளார்.




அப்போது, தனது பணம் பத்திரமாக இருப்பதை உறுதி செய்வதற்காக வண்டியின் டிக்கியை திறந்து பார்த்துள்ளார். அப்போது, டிக்கியில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தனது வண்டியில் இருந்த 1.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டதால் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளார். இருப்பினும், அவர் உடனடியாக அருகில் இருந்த நீலாங்கரை காவல்நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.


இதையடுத்து, கிருஷ்ணசாமியுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பிரியாணி கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, கிருஷ்ணசாமி தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே செல்வதை கவனித்த அங்கிருந்த நபர் ஒருவர், உடனடியாக கள்ளச்சாவி மூலமாக கிருஷ்ணசாமியின் வாகனத்தின் டிக்கியை திறந்துள்ளார். மேலும், டிக்கியில் இருந்த ரூபாய் 1.50 லட்சத்தையும் திருடிக்கொண்டு சென்றுள்ளார்.




இதையடுத்து, போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீஸ் விசாரணையில் அந்த பணத்தை திருடியது வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சிட்டிபாபு என்று தெரியவந்துள்ளது. மேலும், பாலவாக்கம் வங்கியில் இருந்தே கிருஷ்ணசாமியை சிட்டிபாபு பின்தொடர்ந்து வந்ததும், அவர் பிரியாணி சாப்பிட சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணத்தை திருடியதும் தெரியவந்தது. பின்னர், உடனடியாக சிட்டிபாபுவை மடக்கிபிடித்த போலீசார் அவரிடம் இருந்த ரூபாய் 1.50 லட்சத்தையும் பறிமுதல் செய்ததுடன், அவரையும் கைது செய்தனர்.


பின்னர், கிருஷ்ணசாமியின் பணத்தை அவரிடமே ஒப்படைத்தனர். மேலும், பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கிருஷ்ணசாமிக்கு அறிவுரையும் கூறினர். பணத்தை திருடிய குற்றவாளியை உடனடியாக கைது செய்து, பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறையினருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.