" துபாயிலிருந்து கடத்தி வந்த தங்கப் பசை பார்சலை, கடத்தல் ஆசாமி, குப்பைத் தொட்டிக்குள் மறைத்து வைத்திருக்கலாம், என்று கருதி, விமான நிலைய சிசிடிவி காட்சிகளை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர்.
குப்பைத் தொட்டிக்குள் பார்சல்
சென்னை ( Chennai News ) : சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ( chennai international airport ) வருகை பகுதி உள்ள, குப்பைத் தொட்டிகளை, விமான நிலைய தூய்மை பணியாளர்கள் நேற்று சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது குப்பைத் தொட்டிக்குள் ஒரு பார்சல் ஒன்று கிடப்பதை, பார்த்த தூய்மை பணியாளர்கள், சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு, விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.
அபாயகரமான பொருளா ?
இதை அடுத்து அந்தப் பார்சலில் வெடிகுண்டு போன்ற அபாயகரமான பொருட்கள் இருக்கலாம் என்று கருதி, உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் அந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் வெடிகுண்டோ அல்லது அபாயகரமான பொருட்கள் எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்த போது, அதற்குள் தங்க பசை இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அந்தப் பார்சலை விமான நிலைய மேலாளர், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். சுங்க அதிகாரிகள் அந்த பார்சல் ஆய்வு செய்த போது, அதில் 1.1 கிலோ தங்கப் பசை இருப்பது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 60 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள், தங்கப் பசையை பறிமுதல் செய்து, இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கமா ?
மேலும் இந்த தங்கப் பசை பார்சல், துபாயில் இருந்து வந்த விமானத்தில் கடத்தி வந்ததாக இருக்கலாம், கடத்தல் ஆசாமி சுங்கச் சோதனைக்கு பயந்து, தங்கப் பசை பார்சலை, குப்பை தொட்டிக்குள் மறைத்து வைத்திருக்கலாம். அதன்பின்பு குப்பைத்தொட்டியில் உள்ள தங்க பார்சலை, ரகசியமாக வெளியில் எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது. இதை அடுத்து விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய மர்ம பார்சலில், ரூ. 60 லட்சம் மதிப்புடைய 1.1 கிலோ தங்க பசை இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.