ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்குகளின் விலை இன்று வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. ஜொமாட்டோ நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், அதன் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய 2022ஆம் ஆண்டில், ஜொமாட்டோ நிறுவனத்தில் முதலீடு மேற்கொண்டவர்களின் முதலீட்டுத் தொகையில் சுமார் பாதி இதுவரை நஷ்டமாக மாறியுள்ளது. தற்போதைய ஏப்ரல் மாதத்தில் மட்டும், பங்குகளின் மதிப்பு சுமார் 12 சதவிகிதம் குறைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 28 அன்று, ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்கு விலைகள் மிகக் குறைவாக சுமார் 71.6 ரூபாய் என்ற அளவிற்குக் குறைந்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், கடந்த ஜனவரி 3 அன்று சுமார் 141.35 ரூபாய் என்று இருந்த இந்தப் பங்கு விலை தற்போது வரலாறு காணாத வீழ்ச்சியைத் தொட்டுள்ளன.
இந்தியப் போட்டி ஆணையத்தின் சமீபத்திய ஆணையின் காரணமாக, ஜொமாட்டோ விற்பனை சரிவைச் சந்தித்து வருகிறது. உணவகங்களுடன் சட்டவிரோத ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஸ்விக்கி, ஜொமாட்டோ ஆகிய உணவு டெலிவரி நிறுவனங்களின் மீது கடந்த ஏப்ரல் 4 அன்று, இந்தியப் போட்டி ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்டு ஆணை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ஜொமாட்டோ நிறுவனம் இந்த விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கி, தற்போதைய போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் எவ்வாறு இயங்கி வருகிறோம் என்பதை அவர்களுக்கு விவரிக்க உள்ளதாகக் கூறியிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சில நாள்களுக்கு முன்பு பேசிய ஜொமாட்டோ நிறுவனம், `இந்த விவகாரத்தில் போட்டி ஆணையம் வழங்கும் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டின் மார்ச் காலாண்டின் போது, நிறுவன ரீதியான முதலீட்டாளர்கள் பலரும் ஜொமாட்டோ நிறுவனத்தில் மேற்கொண்டிருந்த முதலீடுகளைப் படிப்படியாக குறைத்து வந்துள்ளனர். உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் சுமார் 83 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இது ஜொமாட்டோ நிறுவனத்தின் மொத்த மதிப்பில் சுமார் 1.1 சதவிகிதம் ஆகும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தங்கள் தரப்பில் இருந்த சுமார் 68 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதன் மதிப்பு, நிறுவனத்தின் மொத்த மதிப்பில் சுமார் 0.9 சதவிகிதம் ஆகும். எனினும், தனிநபர் பங்குதாரர்களின் முதலீடுகள் சுமார் 2.07 சதவிகிதம் அதிகரித்து, தற்போது மொத்த மதிப்பில் சுமார் 9.07 சதவிகிதமாக உள்ளது.