ஆன்லைன் உணவு டெலிவரி - இன்றைய காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு பழக்கமாக மாறிவிட்டது. இந்தியாவைப் பொருத்தவரை இரண்டு முன்னணி ஆன்லைன் டெலிவரி ஆப்களை அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த ஆன்லைன் உணவு டெலிவரி சம்பந்தமான சர்ச்சைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், இன்று இந்தியாவின் டிரெண்ட் இதுதான் - #RejectZomato
இதே போல, சோமோட்டோவின் சர்ச்சை சம்வங்கள் ஒரு ரீவைண்ட்!
லேட்டஸ்ட் சம்பவம்:
தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்பவர், நேற்று சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்து இருந்தார். ஆனால் இவருக்கு உணவு முழுமையாக கிடைக்காமல் பாதி பொருட்கள் மட்டுமே வந்துள்ளது. பொதுவாக இது போன்ற சமயங்களில் நமக்கு வந்த உணவு பார்சல் குறித்து சோமேட்டோ சாட் பாக்சில் முறையீடு செய்யலாம். ஆனால், இது குறித்து கேட்ட விகாசிற்கு சோமோட்டா அதிகாரி ஒருவர் பணத்தை திரும்ப தர மறுத்துள்ளார்.
ஆங்கிலத்தில் பேசுவதால் உங்களிடம் சரியாக விவரங்களை தெரிவிக்க முடியவில்லை என்றும் சோமேட்டோ அதிகாரி விகாஷிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞர் விகாஷ், நீங்கள் தமிழ்நாட்டில் சேவை வழங்கினால் தமிழ் தெரிந்த ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அந்த சோமேட்டோ அதிகாரி, இந்தி இந்தியாவில் தேசிய மொழி. இதனால் எல்லோரும் இந்தி தெரிந்து வைத்து இருப்பது அவசியம் என்று பதில் அளித்துள்ளார். இது சர்ச்சையாகி இன்று வைரலானது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரிஜக்ட் சோமாட்டோ ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர் நீக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், தமிழுக்கு தனி முக்கியத்துவம் தரப்போவதாகவும் அறிவித்துள்ளது சோமாட்டோ.
சம்பவம் -2
பெங்களூரைச் சேர்ந்த ஹிட்டேஷா சந்திரனே என்பவர், 2021 மார்ச் மாதம் சோமோட்டோவில் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் டெலிவெரி செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. டெலிவரி தாமதம் ஆவதால், ஆர்டரை ரத்து செய்ய திட்டமிட்டிருக்கிறார் ஹிட்டேஷா. ஆனால், அதற்குள் டெலிவரி செய்பவர் வீட்டை அடையவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது சோமோட்டோ டெலிவரி அதிகாரி தன்னை தாக்கியதாக ஹிட்டேஷா வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலாகவே, சமூக வலைதளம் இரண்டானது. டெலிவரி அதிகாரி, தன் பக்க விளக்கத்தை தெரிவித்தார். ஹிட்டேஷா அவரை செருப்பால் அடிக்க வந்ததாகவும், தற்காப்புக்காக தடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் மிகவும் வைரலானது.
சம்பவம் -3
2019-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு சம்பவத்தில், ”இந்து அல்லாத வேறு மதத்தைச் சேர்ந்த டெலிவரி அதிகாரி தேவையில்லை” என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி ஆர்டரை ஒருவர் கேன்சல் செய்தார். பணத்தை கூட திருப்பி தர வேண்டாம், ஆர்டரை கேன்சல் செய்தால்போதும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டது நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்தது. இந்த சர்ச்சைக்கு பதிலளித்த சோமோட்டோ நிறுவனம், “உணவுக்கு மதம் இல்லை. உணவே மதம்” என பதிவிட்டது.
சம்பவம் - 4
சோமோட்டோ டெலிவரி அதிகாரி ஒருவர், டெலிவரி செய்ய இருந்த பார்சல்களில் இருந்து உணவு சாப்பிடும் வீடியோ வைரலானது. ஒவ்வொரு பாக்கெட்டாக எடுத்து உணவு சாப்பிட்ட அவர், பிறகு அதை பேக் செய்து மீண்டும் டெலிவரிக்கு எடுத்துச் செல்வதாக அந்த வீடியோவில் இருந்தது. இது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்