கடன் சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்த ஜீ குழுமத்தின் நிறுவனர்கள் பங்குகளை விற்று கடனை செலுத்தி வந்தனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ஜீ மற்றும் சோனி குழுமம் இணைவதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியானது. ஆனால் ஜீ குழுமத்தில் உள்ள தனிப்பட்ட பெரிய முதலீட்டாளரான அமெரிக்க முதலீட்டு நிறுவனமான இன்வெஸ்கோ இதனை கடுமையாக எதிர்த்தது. இயக்குநர் குழுவை கலைக்க வேண்டும், தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் புனீத் கோயங்காகவை நீக்க வேண்டும் என இன்வெஸ்கோ இந்த இணைப்புக்கு எதிராக நடந்துகொண்டது.
இது தவிர நிறுவனத்தின் கார்ப்பரேட் கவர்னன்ஸ் சரியில்லை. நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களின் நலனை பிணையாக வைத்து, ஜீ குழும நிறுவனர்களுக்கு கூடுதல் பங்குகள் வழங்கப்பட்டது. இதில் புரமோட்டர்களை தவிர மற்ற பங்குதாரர்களுக்கு பெரிய பலன் இல்லை என பொதுவெளியில் தெரிவித்தது. இன்வெஸ்கோ என்.சிஎல்.டியிடம் முறையிட்டது. அதேசமயம் இன்வெஸ்கோ குழுமத்தின் சிறப்பு கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஜீ குழுமம் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இதற்கிடையில் ஜீ குழுமத்தின் பங்குகளும் வேகமாக உயர்ந்து வந்தன.
சோனிக்கு முன்பாக ரிலையன்ஸ்
ஜீ பங்குகள் உயர்ந்தாலும், சோனியுடன் இணைப்பு பிறகு இன்வெஸ்கோ நிறுவனம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிவந்தது. இதற்கான காரணம் தற்போது தெரியவந்திருக்கிறது. கடந்த பிப்ரவரியில் ஜீ குழுமத்தை ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைப்பதற்காக பேச்சு வார்த்தையை இன்வெஸ்கோ முன்னெடுத்தது. ஆனால் அந்த இணைப்பு வெற்றியடையவில்லை. இதனை தொடர்ந்து சோனி குழுமத்துடன் இணைக்கப்பட்டது. அது முதல் தன்னுடைய விமர்சனங்களை இன்வெஸ்கோ கூறிவருகிறது.
ரிலையன்ஸ் உடன் இணைப்பு ஏற்பட்டால் அது அனைத்து பங்குதாரர்களுக்கும் சாதமாக இருக்காது. நிறுவனத்தின் மதிப்பில் சுமார் 10000 கோடி அளவுக்கு இழப்பு இருக்கும் என ஜீ குழுமம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனத்தின் நிறுவனர்களையும் நாங்கள் மதிக்கிறோம். எந்த நிறுவனத்தையும் கட்டாயப்படுத்தி கையகப்படுத்த வேண்டும் என நாங்கள் நினைப்பதில்லை என ரிலையன்ஸ் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
புனித் கோயங்கா அறிக்கை
கடந்த சில வாரங்களாகவே சிக்கல் இருந்து வந்த சூழலில் ஜீ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி புனித் கோயங்கா வெளியிட்டுள்ள அறிக்கை சூழலை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது.இதுபோன்ற சூழலில் இத்தனை நாட்கள் ஏன் இன்வெஸ்கோ நிறுவனம் அமைதியாக இருக்க வேண்டும். கார்ப்பரேட் கவர்னன்ஸ் என்பது நிறுவனங்களுக்கு மட்டும்தானா? முதலீட்டாளர்களுக்கு கிடையாதா என கேள்வி எழுப்பி இருக்கிறார். தனிப்பட்ட எங்களின் நலனை விட நிறுவனத்தின் நலன் முக்கியம். அதைவிட அனைத்து பங்குதாரர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். நிறுவனர்களும் முதலீட்டாளர்களும் வேறு வேறு கிடையாது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். நிறுவனத்தின் இயக்குநர் குழு மற்றும் சட்டவல்லுநர்களுடன் இணைந்து நிறுவனத்தின் நலனுக்கு ஏற்ப செயல்படுவோம்.
இன்வெஸ்கோ கொண்டுவந்த புரபோசல் ( ரிலையன்ஸ் என்னும் பெயரை குறிப்பிடாமல்) நிறுவனத்தின் நலனுக்கு ஏற்புடையதாக இல்லை. அந்த புரபோசலில் பங்குதாரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இருந்தது. அதன் காரணமாகவே அந்த புரபோசலை நாங்கள் ஏற்கவில்லை.அமைதியாக இருப்பதுதான் சிறந்த தீர்வு என இதுவரை கருதி இருந்தேன். ஆனால் தற்போது அமைதியை விட நிறுவனத்தின் நலன் முக்கியம். நான் பேச தொடங்கினால்தான் அனைவருக்கும் உண்மை தெரியும் என கோயங்கா தெரிவித்திருக்கிறார்.
மறைமுக ஆதாயமா?
ஜீ குழுமத்தில் முதலீடு செய்தள்ளது அமெரிக்காவை சேர்ந்த இன்வெஸ்கோ என்னும் முதலீடு நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவிலும் மியூச்சுவல் பண்ட் நடத்தி வருகிறது. 36 பண்ட்கள் உள்ளன. இதில் 17 பண்ட்கள் ரிலையன்ஸ் தொடர்பான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இதுதவிர டிவி 18 பிராட்காஸ்ட் மற்றும் நெட்வொர்க் 18 மீடியா பங்குகளிலும் இன்வெஸ்கோ முதலீடு செய்துள்ளது.
அதனால் ஜீ குழுமத்தை ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைப்பதன் மூலம் மறைமுக ஆதாயம் பெற இன்வெஸ்கோ திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.என்.சி.எல்.டி வசம் இன்வெஸ்கோ முறையீடு செய்திருக்கிறது. வரும் அக்டோபர் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க ஜீ குழுமத்துக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.நிறுவனத்தின் நலன் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க: அதிகரிக்கும் க்ரிப்டோகரன்சி மயம்: இந்திய ரூபாய் நோட்டுக்கு ஆபத்தா? - ரகுராம் ராஜன் சொன்னது என்ன?