க்ரிப்டோ கரன்ஸி ஆதிக்கம் சர்வதேச நாடுகளில் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு நாடுகள் தங்களது நாணயங்களை டிஜிட்டல் நாணயங்களாக வெள்ளோட்டம் விட்டு அறிமுகப்படுத்தி வருகிறது. சீனா ஏற்கெனவே தனது யுவானை டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்துவதால் பேப்பர் பில் பயன்பாட்டில் இருப்பது கணிசமாகக் குறைந்துவிடும். 


இதற்கிடையே அமெரிக்காவும் தனது டிஜிட்டல் டாலர்களைப் பயன்பாட்டில் விட இருப்பதாகத் தற்போது அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அமெரிக்க மத்திய வங்கி இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் அமெரிக்க டாலர் டிஜிட்டல் முறையில் பயன்பாட்டுக்கு வருவது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. 






இதுகுறித்து ப்ளூம்பெர்க் ஊடகத்துக்குப் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அளித்துள்ள பேட்டியும் தற்போது வைரலாகி வருகிறது. ரகுராம் ராஜன் சர்வதேச நிதியத்தின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ரகுராம் ராஜன் அளித்துள்ள பேட்டியில், ‘டிஜிட்டல் டாலர்கள் பயன்பாட்டுக்கு வருவது பணம் எல்லோரிடமும் இருப்பதற்கு வழிவகை செய்யும். காகிதத்தில் பணம் இருக்கும் காலத்தில் இதுபோன்று ஜனநாயக முறையிலான பணப்பரிமாற்றம் சாத்தியமில்லை. ஆனால் டிஜிட்டல் டாலர்களில் அது சாத்தியம். அதனால் ஏழை நாடுகளில் அமெரிக்கா தனது டிஜிட்டல் டாலர்களைப் புழக்கத்தில் விடுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இறங்குமுகமாக அந்த நாட்டின் உள்ளூர் நாணயங்களின் மதிப்பை இது குறைத்துவிடும். மக்கள் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளூர் பணத்தைப் பயன்படுத்துவது குறையும். இதனால் அந்த நாட்டின் அரசுகள் நாணய நோட்டுகளை அச்சிடுவதற்கான உரிமத்தை இழக்கும். இது சர்வதேசப் பொருளாதாரத்தில் ஜனநாயக நாடுகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக அமெரிக்க டாலருக்கு நிகரான க்ரிப்டோ கரன்சியின் மதிப்பு வரலாற்றுச்சாதனையாக $67,000 என்கிற இலக்கை அண்மையில் எட்டியிருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான க்ரிப்டோ கரன்சி மதிப்பு அமெரிக்க டாலரை விட அதிகரித்து வருவதும் கூட டிஜிட்டல் டாலர்களைப் புழக்கத்தில் விடக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.