எந்த ஒரு பொருளுக்கும் மொத்த சந்தை மதிப்பு எவ்வளவு என்பதை தொழில்நிறுவனங்கள் கணிக்கும். வாய்ப்பை தெரிந்தபிறகுதான் அந்த தொழிலில் இறங்குவார்கள். எவ்வளவு திட்டமிட்டாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலான வளர்ச்சியை அந்த தொழிலால் அடைய முடியாது. அப்போது தொழில் நிறுவனங்கள் பலவேறு யுத்திகளை பயன்படுத்துவார்கள். இதன் மூலம் வருமானத்தை உயர்த்த திட்டமிடுவார்கள்.
1920-ம் ஆண்டு அமெரிக்காவில் பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லலாம் அல்லது மிக மிக குறைந்த சதவீதத்தினர் மட்டுமே புகைபிடித்தனர். மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பாதி நபர்கள் சிகரெட் பிடிக்கவில்லை என்றால் வருமானம் எப்படி உயரும் என நினைத்த அமெரிக்கன் டொபோகோ கம்பெனி யுத்தியை மாற்றவேண்டும் என நினைக்கிறது. பெண்களிடத்தில் சிகரெட்டை கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைகின்றன.
இதனால் 1928ம் ஆண்டு Edward bernays என்னும் மக்கள் தொடர்பு அதிகாரியை இந்த நிறுவனம் நியமனம் செய்கிறது. மக்கள் தொடர்பு பிரிவின் தந்தை என இவரை அமெரிக்கா அழைக்கிறது. இவர் செய்த நடவடிக்கையால் பெண்களிடத்தில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது.
ஒவ்வொரு பொருளையும் அலசி ஆராய்ந்து, அறிவை பயன்படுத்து தேவை அடிப்படையில்தான் நாம் வாங்குகிறோம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பொருளை வாங்குவதில் அறிவை விட உணர்வே முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுதான் edward bernays சொல்ல வரும் தியரி.
அமெரிக்காவில் நடக்கும் சமூக நிகழ்வுகளில் பிரபலங்கள் மற்றும் அழகிய பெண்களை கலந்துகொள்ள செய்து சிகரெட் பிடிக்க வைத்திருக்கிறார்கள். மேலும் புகைப்பட கலைஞர்களை வர வைத்து போட்டோபிடித்து செய்திதாள்களில் செய்தியாக்கி இருக்கிறது. அதாவது நாட்டில் பெண்கள் சிகரெட் குடிக்க தொடங்கிவிட்டனர் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
இதைவிட முக்கியம் அந்த கட்டுரைகளில் பெண்கள் தங்களது சிகரெட்டுகாக மட்டும் நெருப்பை பற்றவில்லை. `சுதந்தரத்துக்கான ஒளியையும்’ ஏற்றி இருக்கிறார்கள் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பெண்கள் சிகரெட் பிடிக்க தொடங்கிவிட்டார்கள் மற்றும் சிகரெட் பிடிப்பது சுதந்திரம் என்பதை பெண்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான், பெண்களுக்கு ஓட்டுபோடும் வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி வேலைக்கு செல்ல தொடங்குகிறார்கள், ஆண்களை போல முடிவெட்டிக்கொள்கிறார்கள். இந்த சூழலில் சிகரெட் பிடிப்பது சுதந்திரம் என மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். இதனால் சிகரெட் விற்பனை அடுத்த சில ஆண்டுகளில் இரு மடங்காகி இருக்கிறது. (இலவச இணைப்பாக புற்றுநோயையும் வாங்கி இருப்பார்கள்.
மக்கள் தங்கள் பாதுகாப்பின்மையை மறைப்பதற்காக பொருட்களை வாங்குகிறார்கள், கூடுதலாக செலவு செய்கிறார்கள் என்பதுதான் Edward-ன் கணிப்பு.
இந்த தியரியை அடிப்படையாக கொண்டே பெண்களுக்கான அழகு சாதன பொருட்களின் சந்தையும் இருக்கிறது. விளம்பர உலகத்தால் கட்டமைக்கப்பட்ட மாய உலகில் கனவுகளில் பலர் வாழ்வாதாலே பிரச்சினைகள் உருவாகின்றன. நமது ஆசைகளும் இலக்குகளும் எதார்த்ததுக்கு மிக அருகில் இருந்த பிரச்சினை இல்லை. அல்லது நமது ஆசைகளுக்கான உழைப்பு மற்றும் திட்டமிடலாவது இருக்கவேண்டும். இது இரண்டும் இல்லையெனில் ஏமாற்றமே மிஞ்சும்.
பென்ஸ் காரில் போக வேண்டும், செவன் ஸ்டார் ஓட்டலில் தங்க வேண்டும் என ஆசை இருக்கலாம். இது எதார்த்தமா அல்லது பேண்டஸியா என்னும் புரிதல் இல்லையெனில் நிகழ்காலத்தை தொலைக்கிறோம் என்பது மட்டுமே உண்மை.
ஒரு பொருளை வாங்கும்போது தேவையின் அடிப்படையில் வாங்குகிறோமா அல்லது உணர்வு மிகுதியால் வாங்குகிறோமா என்பதை புரிந்துகொண்ட பிறகு வாங்க வேண்டும். அதேபோல நம்முடைய பாதுகாப்பின்மை அல்லது தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்காக வாங்குகிறோமா என்னும் விழிப்புணர்வு அவசியம். இல்லையெனில் விளம்பர உலகில் நீங்களும் ஒரு இரையே!
(இது ஒரு கேஸ் ஸ்டடி மட்டுமே. இதில் எது சரி எது தவறு என்பதை முடிவெடுத்துக்கொள்வது தனிநபரை சார்ந்தது)