எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் அதிக முன்னெடுப்பை எடுத்து வருகிறது ஓலா. அதன்படி, இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிரபல ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.  இதன் ஆன்லைன் விற்பனை ஏற்கெனவே தொடங்கப்பட்ட நிலையில் முன்பதிவு செய்த நபர்களுக்கு அடுத்த மாதம் ஸ்கூட்டர்கள் டோர் டெலிவரி செய்யப்படும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஓலா ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு விற்பனை தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அப்போது தெரிவித்த ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  பவிஷ் அகர்வால் “துரதிருஷ்டவசமாக,  விற்பனைக்கான எங்கள் வலைத்தளத்தில் நேரலை செய்வதில் பல தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்தோம். எனவே கோளாறுகளுக்கு தீர்வு கண்டுவிட்டு, வருகிற செப்டம்பர் 15 எங்கள் விற்பனையை மீண்டும் துவங்குவோம் , இதனால் முன்பதிவு செய்த நபர்களுக்கு எவ்வித சிக்கல்களும் நேராது“ என தெரிவித்தார்.




இது புறமிருக்க ஓலா தொழிற்சாலை தொடர்பான அவரது சமீபத்திய அறிவிப்பு பல்வேறு தரபினரிடமும் பாராட்டுகளை குவித்து வருகிறது. அதாவது பெண்களால் ஆன தொழிற்சாலை என்ற புதிய பார்முலாவை பின்பற்ற இருப்பதாக ஓலா இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ஓலா ப்யூச்சர் தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என அறிவிக்கிறேன். இந்த அறிவிப்பு மூலம் நான் பெருமிதம் கொள்கிறேன். ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் படி இது சாத்தியமாகும். முழுவதும்  பெண்களால் நடத்தப்படும் பெரிய தொழிற்சாலையாக இருக்கும். பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை அதிகரித்தால் குடும்பம், சமூகம் என அனைத்துமே முன்னேறும் என்றார். 


மேலும், தொழிற்சாலை முழுமை பெற்றால் சுமார் 10ஆயிரம் பெண்கள் இங்கு பணியாற்றுவார்கள் எனக் குறிபிட்டுள்ள பாவிஷ், இங்கு பணியாற்றுவதற்காக அவர்களுக்கு பிரதேய பயிற்சியும், உற்பத்தி துறை சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஓலாவின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.