புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கும் போதும், நிதி முதலீடுகள் மேற்கொள்ளும் போதும் யாரையேனும் பரிந்துரைக்கும் விதமாக `நாமினி’ என்ற பகுதி இடம்பெற்றிருக்கும். வங்கிக் கணக்கைத் தொடங்கி, லாக்கர் பயன்படுத்த விரும்புவோரும், முதலீடு மேற்கொள்ள விரும்புவோரும் பெரும்பாலானோர் இந்தப் பகுதியை நிரப்பாமல் காலியாக விட்டுச் செல்வது வழக்கம். எனினும், இவ்வாறு நாமினி விவரங்களை நிரப்பாமல் இருப்பது சரியானதல்ல. நாமினி விவரங்களை வங்கிக் கணக்கு தொடங்கும் போது ஏன் நிரப்ப வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே விளக்கியுள்ளோம். 


யாரெல்லாம் `நாமினி’ ஆக இருக்க முடியும்?


வங்கிக் கணக்கு தொடங்கும் போதும், நிதி முதலீடுகள் மேற்கொள்ளும் போதும் ஒரு நபரின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டும். அந்த நபரே நாமினி ஆவார். அவர் உங்களுக்கு நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கலாம். உங்கள் பெற்றோர், இணையர், சகோதரர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் மறைவுக்குப் பிறகு, உங்கள் கணக்கில் இருக்கும் தொகை உங்கள் நாமினிக்கு வழங்கப்படும். சில முதலீடுகளில் பல நாமினிக்களின் பெயர்களைப் பரிந்துரைப்பதோடு, ஒவ்வொரு நாமினிக்கும் குறிப்பிட்ட சதவிகித தொகையைப் பகிர்ந்து அளிக்கும் அம்சங்களையும் வழங்குகின்றனர். பகிர்வதற்கான விகிதத்தை அளிக்காத சூழலில், தொகை சமமாகப் பிரித்து வழங்கப்படும். 



நாமினி பெயர் சேர்ப்பதன் முக்கியத்துவம் என்ன?


எதிர்பாராத மரணங்களின் போது, உயிரிழந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுக்கு வங்கிக் கணக்கில் உள்ள தொகை சொந்தமாகும். எனினும், இதில் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை வழங்குவது தொடங்கி, சில நேரங்களில் நீதிமன்ற ஆணை பெறும் சூழல் கூட உருவாகலாம். எனவே உயிரிழந்த நபர் தன் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்திற்கான நாமினி பெயரைச் சேர்க்காமல் இருந்தால் இத்தகைய சிக்கல்கள் உருவாகின்றன. எனினும், நாமினி பெயர் இடம்பெற்றிருக்கும் சூழலில், வங்கிகளால் எளிதில் பணத்தை நாமினிக்களிடம் அளித்துவிட முடியும். 


வங்கி லாக்கர்களுக்கு நாமினிகளைப் பரிந்துரைக்கலாம்!


ஒருவரின் எதிர்பாராத மரணத்தின் போது, அவரது வங்கிக் கணக்கு மட்டுமின்றி, அவரது வங்கி லாக்கர் உரிமமும் நாமினிக்கு வழங்கப்படும். இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் தங்கள் நகைகளை வங்கி லாக்கர்களில் பாதுகாக்கின்றனர். எனவே கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்கள், புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள் முதலானோர் தங்கள் வங்கிக் கணக்கிற்கு நாமினிகளை பரிந்துரைக்க வேண்டும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண