கடந்த இரு ஆண்டுகளில் கோவிட் சிக்கலில் ஓடிவிட்டது. அடுத்த ஆண்டு சர்வதேச பொருளாதார சூழல் எப்படி இருக்கும் என்பது குறித்து சர்வதேச வல்லுநர்களின் கருத்தை கேட்டு புளூம்பெர்க் வெளியிட்டிருக்கிறது. சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என பலவற்றையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த சர்வதேச சூழல் மட்டுமல்லாமல் பிராந்திய அளவிலும் சூழல் எப்படி இருக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். அவை என்ன என்பதை பார்ப்போம்.
கோவிட் ஓரளவுக்கு முடிந்துவிட்டது என நினைக்கும்போது அதனுடைய புதிய வேரியன்ட் ஒமிக்ரான் சமீபத்தில் வந்திருக்கிறது. இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்துதான் சர்வதேச பொருளாதாரத்தின் திசை இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது அதிக ஆபத்தில்லாத வேரியன்ட் அதேசமயம் வேகமாக பரவக்கூடியது என இதுவரை தகவல் வெளியாகியிருக்கிறது.
பாதிப்பு குறைவாக இருப்பது ஒரு சாதகம் என்றாலும், வேகமாக பரவுவதால் பகுதி பகுதியாக லாக்டவுன் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் அடுத்த ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்படலாம். இதனால் தேவை குறைவு, வேலை இழப்பு, லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் மந்த நிலை உருவாகக் கூடும்.
பணவீக்கம்
ஒமிக்ரான் என்பது ஒரு சிக்கல் மட்டுமே. இதுதவிர வேறு சில சிக்கல்களும் உள்ளன. 2021ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பணவீக்கம் 2 சதவீதம் என்னும் அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போது 7 சதவீதம் என்னும் அளவில் இருக்கிறது. இதுபோல சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது முக்கிய சிக்கலாக மாறக்கூடும். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான பதற்றத்தால் எரிவாயு விலை உயர்ந்துவருகின்றன. சர்வதேச அளவில் பணியாளர்களின் சம்பளமும் உயர்ந்துவருகிறது.
பரவல் அதிகரித்தால் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படகூடும். அப்போது கச்சா எண்ணெய் விலை குறையலாம். இருந்தாலும் ஏற்கனவே இருக்கும் தேக்க நிலை காரணமாக ஒரு மந்த நிலை இருக்கக்கூடும். இதனை ஒவ்வொரு நாடுகளின் மத்திய வங்கிகளும் சமாளிக்க வேண்டி இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் 2007ஆம் ஆண்டு சப் பிரைம் கிரைசஸ் இருந்த சூழலில் ரியல் எஸ்டேட் சந்தை இருக்கிறது. ரியல் எஸ்டேட் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. வட்டி விகிதம் குறைவாக இருப்பதால் விலையேற்றம் இருக்கிறது. அதனால் 2022ஆம் ஆண்டு மூன்று முறை வட்டியை உயர்த்துவதற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஒரு வேளை உயர்த்தும்பட்சத்தில் 2023ஆம் ஆண்டு பொருளாதார மந்த நிலை உருவாகலாம்.
அமெரிக்காவில் வட்டி விகிதத்தை உயர்த்தினால் வளரும் நாடுகளிலும் பொருளாதார சிக்கல் உருவாக கூடும். அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்ந்தால் அமெரிக்க டாலர் பலமாகும். இதனால் வளர்ந்த நாடுகளுக்கு செல்லும் முதலீடு பாதிக்கப்பட கூடும்.
சீனாவில் எப்படி இருக்கும்?
சீனாவில் 2021-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு பெரும் சிக்கலாகவே இருந்தது. முக்கியமான ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர் கிராண்ட் பெரும் சிக்கலை சந்தித்தது. இதுதவிர எனர்ஜி சிக்கல் உள்ளிட்ட பிற காரணங்களால் சீனாவின் வளர்ச்சி 6 சதவீதத்துக்கு கீழ் சென்றது. அடுத்த ஆண்டு எனர்ஜி சிக்கல் குறையும் வாய்ப்பு இருந்தாலும், வேறு சில சிக்கல்கள் சீனாவுக்கு இருக்கிறது. இதுவரை அங்கு பெரிய அளவுக்கு கோவிட் சிக்கல் உருவாகவில்லை. அதனால் ஒமிக்ரான் வேகமாக பரவும் வாய்ப்பு இருக்கிறது. தவிர சீன பொருளாதாரத்தில் ரியல் எஸ்டேட் முக்கிய பங்கு (25%) வகிக்கிறது. எவர்கிராண்ட் பிரச்சனையால் மேலும் சரிவை சீன பொருளாதாரம் சந்திக்க கூடும். சீனா பொருளாதாரம் சரிந்தால் உலகப் பொருளாதாரமும் பாதிக்கப்படக்கூடும்.
கோவிட் வந்ததில் இருந்து சர்வதேச நாடுகள் பெரிய அளவிலான ஊக்க நடவடிக்கைகளை வழங்கிவருகின்றன. இரு ஆண்டுகளாக நடந்துவரும் இந்த நடவடிக்கைகளை ஒவ்வொரு நாடும் அடுத்த ஆண்டில் குறைக்கலாம். குறைக்க கூடிய இந்த அளவு சர்வதேச ஜிடிபியில் 2.5 சதவீதம் அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
சாதகம் என்ன?
தற்போது வழங்கப்பட்டுள்ள சலுகைகள் அடுத்த ஆண்டிலும் தொடரும் வாய்ப்பு இருக்கிறது. சர்வதேச அளவில் கோடிக்கணக்கான டாலர் ஊக்க நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் லாக் டவுன் காரணத்தால் சிக்கனமாக மக்கள் இருப்பதால் குடும்பங்களில் சேமிப்பு உயர்ந்திருக்கிறது. சேமிக்கப்பட்டிருக்கும் தொகை சந்தைக்கு (முதலீடு அல்லது செலவு) வரும்பட்சத்தில் பொருளாதாரம் வேகமாக வளரும்.
2021ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்டதைவிட சில பொருளாதாரங்கள் சிறப்பாக வளர்ந்தன. அதுபோன்ற மாற்றங்கள் 2022ஆம் ஆண்டிலும் ஏற்படக்கூடும் என புளூம்பெர்க் கூறியிருக்கிறது.