கடந்த வாரம் பேட் பேங்க் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அது என்ன பேட் பேங்க். அதனால் என்ன பயன் என தெரிந்துகொள்வதற்கு முன்பு வங்கித்துறையை குறித்து புரிந்துகொள்ள வேண்டும்.


வங்கிகளின் முக்கிய தொழில் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் பெற்று, அந்த டெபாசிட்டை அடிப்படையாக வைத்து தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கும். வங்கிகளின் அடிப்படை தொழில் இதுதான். ஆனால் கொடுத்த கடன்கள் அனைத்தும் திரும்பி வரும் என சொல்ல முடியாது. அதனால் சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு கொடுத்த கடன்களில் சில சதவீதம் அளவுக்கு திரும்ப கிடைக்காமல் போகும். இவற்றை வாராக்கடன்கள் என அழைக்கிறோம்.


வாராக்கடன்கள் அதிகரிப்பது வங்கிகளுக்கு மட்டும் கெடுதல் அல்ல, பொருளாதாரத்துக்கும் கேடு. வாராக்கடன் அதிகரித்தால், எவ்வளவு தொகை வரவில்லையோ அந்த தொகைக்கு ஈடாக வங்கியின் லாபத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதனால் வங்கியின் லாப  வரம்பும் குறையும். ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு வங்கியின் வாராக்கடன் அதிகரித்தால் வங்கியை நடத்த முடியாத சூழல் ஏற்படும். மேலும் வாராக்கடன் அதிகமாக இருந்தால் அடுத்த புதிதாக வரும் ஒரு வாடிக்கையாளர் / நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க முடியாத சூழல் உருவாகும்.


அதனால் வங்கிகளின் வாராக்கடன் என்பது உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினை. இதுவரை வங்கிகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு வாராக்கடன் இருக்கிறது. இந்த தொகை மிகப்பெரிய தொகை. இதுவரை வாராக்கடன் ஏற்பட்டு விட்டால், இதற்கென பிரத்யேக குழுவை அமைத்து வாராக்கடன் வசூலிப்பது அல்லது சம்பந்தப்பட்டவரின் சொத்துகளை விற்பது உள்ளிட்ட பணிகளை வங்கிகள் செய்யும். இது வங்கிகளுக்கு மிகப்பெரிய சிக்கல்.


இதற்காக உருவாக்கப்பட்டதுதான் பேட் பேங்க். வங்கிகள் தங்களிடம் உள்ள கடன்களை இந்த பேட்பேங்குக்கு விற்கும். அந்த கடனில் தற்போதைய மதிப்பில் 15 சதவீதம் வரை இந்த பேட் பேங்க் கொடுத்துவிடும். மீதமுள்ளவை படிப்படியாக வசூலிக்கப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்படும்.


பேட் பேங்க் என்பது ஒரு வங்கி கிடையாது. இரு வங்கிகள் சேர்ந்தவைதான் பேட்பேங்க். ஒரு வங்கி National Asset Reconstruction Company. (இதில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 51 சதவீதமாகும். ரூ.500 கோடிக்கு மேலான வாராக்கடனை இந்த வங்கி ஏற்றுக்கொள்ளும்) இந்த நிறுவனம் வங்கிகளிடம் இருந்து வாராக்கடன்களை வாங்கும்.


மற்றொரு நிறுவனம் India Debt Resolution Company. இந்த நிறுவனம் வாங்கப்பட்ட வாராகடன் உள்ள நிறுவனத்தில் உள்ள சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கையில் இறங்கும். இந்த இரண்டும் சேர்ந்துதான் பேட் பேங்க் என கூறப்படுகிறது.




ரூ.30,600 கோடி மத்திய அரசு உத்தரவாதம்


சர்வதேச அளவில் பேட் பேங்க் என்னும் கான்செப்ட் பிரபலம். அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் ஆகியவை இதுபோன்ற அமைப்பை உருவாக்கின. இதனை தொடர்ந்து பின்லாந்து, பெல்ஜியம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இதுபோன்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதனால் இந்தியாவில் இப்படி ஒரு நிறுவனம் இருக்க வேண்டும் என்னும் கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவந்தது.


ஆனால் இதுவரை 28 தனியார் Asset Reconstruction Company நிறுவனங்கள் உள்ளன. ஆனால் வாராக்கடனில் உள்ள சொத்துகளை மதிப்பிடுவதில் வங்கிகளுக்கும், ஏஆர்சி நிறுவனங்களுக்கும் உள்ள சிக்கல் காரணமாக அதிக வாராக்கடன்கள் தனியார் நிறுவனங்களிடம் செல்லவில்லை. அதனால் தற்போது அரசு உத்தரவாதத்துடன் பேட் பேங்க் தொடங்கப்படுகிறது.


வாராக்கடனை விற்பதன் மூலம் 15 சதவீதம் உடனடியாக ரொக்கமாக வங்கிகளுக்கு கிடைத்துவிடும். மீதமுள்ள பங்குகளாக இருக்கும். பேட் பேங்க் வாராகடனில் உள்ள சொத்துகளை விற்று வங்கிகளுக்கு பணத்தை கொடுக்க வேண்டும். ஒரு வேளை கொடுக்க முடியவில்லை எனில் அரசு உத்தரவாதம் மூலம் இந்த பணம் வங்கிக்கு கிடைக்கும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.30,600 கோடி அளவுக்கு மத்திய அரசு உத்தரவாதம் கொடுத்திருக்கிறது.


வாராக்கடனை விற்பதால் உடனடியாக வங்கிகளுக்கு பணம் கிடைக்கும். வங்கிகளின் வரவு செலவு கணக்கு பலமாகும். இதனால் வங்கிகளின் கேஷ் புளோ அதிகரிக்கும். மேலும் புதிய கடன்கள் வழங்க முடியும் என சாதகங்கள் இருப்பதால் பேட் பேங்க் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் வங்கி பங்குகள் உயரந்திருக்கின்றன.


மொத்தமுள்ள ரூ.2 லட்சம் கோடி வாராக்கடனில் ரூ.90,000 கோடி  வாராக்கடன் முதல் கட்டமாக மாற்றப்படும் என தெரிகிறது. சர்வதேச அளவில் முக்கிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய வங்கிகளின் வாராக்கடன் 9.5 சதவீதமாக இருக்கிறது. இந்த அளவு மிக அதிகம் என்பதால் தற்போது பேட் பேங்க் உருவாக்கப்பட்டிருக்கிறது.


தற்போதைய நிலையில் பேட் பேங்க் சாதகமாக அறிவிப்பு போல தெரியும். ஆனால் ரகுராம் ராஜன் உள்ளிட்ட  சிலர் இந்த அறிவிப்பை எதிர்த்திருக்கிறார்கள். ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து மற்றொரு பொதுத்துறை நிறுவனத்துக்கு கடனை மாற்றுவதால் என்ன நடக்கும் என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.


வாராக்கடனை எப்படி விற்று காசாக்குகிறார்கள் என்பதை பொறுத்து பேட் பேங்கின் வெற்றி இருக்கிறது.