2006ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றவர் இந்திரா நூயி. போர்பஸ் பத்திரிகை 2008ம் ஆண்டு உலகின் 100 மிக வலிமையான பெண்கள் பட்டியலில் இந்திரா நூயிக்கு 3ம் இடம் வழங்கியது. உலக அளவில் செல்வாக்குமிக்க Fortune 50 கம்பெனிகளில் ஒன்றுக்கு தலைமைத் தாங்கிய முதல் கருப்பின மற்றும் புலம்பெய்ர்ந்த பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு.
தனது வாழ்க்கை வரலாற்றை ‘My Life in Full’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தில் அமெரிக்காவில் அவர் குடியேறும் போது நிகழ்ந்த அனுபவங்கள், கல்லூரி காலம், தனது வேலை, குடும்ப வாழ்க்கை என பலவற்றையும் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த சுயவரலாற்று புத்தகத்தில், தான் நேர்காணலுக்குச் சென்ற இடத்தில் தனக்கு கிடைத்த சிறிய அட்வைஸ் தன்னை எப்படி மாற்றியது என்பது பற்றி சுவாரசியமான ஒரு அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
நான் கல்லூரியில் மிகச்சிறந்த மாணவியாக இருந்தேன். என்னுடைய பேராசிரியர்கள் வேலைக்காக என்னை பலரிடம் ரெஃபெர் செய்ய தயாராக இருந்தார்கள். என்னை ஒரு கடின உழைப்பாளியாகவும், எளிமையாக யார் வேண்டுமானாலும் என்னுடன் இயைந்து வேலை செய்ய முடியும் என்றும் நம்பினார்கள். பல்வேறு பிரச்சினைகளில் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு தேவைப்படும் தனித்துவமான உலகளாவிய பார்வை என்னிடம் இருப்பதாக கருதினார்கள். அந்த சமயத்தில் பல நிறுவனங்கள் நான் படித்த Yale school of managementக்கு வந்தனர். நான் அவர்களை இம்ப்ரெஸ் செய்ய வேண்டியிருந்தது.
அப்போது, எனக்கு இருந்த மிகப்பெரிய கவலையே என்னிடம் சரியான பிசினஸ் உடைகள் இல்லாததுதான். என்னுடைய ஒட்டுமொத்த சேமிப்பான 50 டாலர்களை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்றேன். கருநீல பாலிஸ்டர் சட்டை, இரண்டு பட்டன்களைக் கொண்ட ஜேக்கெட், அதற்கு மேட்ச்சாகிற ஒரு பேண்ட் ஆகியவற்றை வாங்கினேன். இந்த உடைகள் எனக்கு பொருந்துகிறதா என அணிந்து பார்ப்பதற்காக நான் ட்ரயல் ரூமுக்குச் சென்றேன். ஆனால் அதற்கு முன்பு ட்ரயல் ரூம் பக்கமெல்லாம் சென்றதே இல்லை. அதனால் எனக்கு அது ரொம்ப சங்கடமாக இருந்தது. எனவே, அந்த உடைகளை வெறுமனே கண்ணாடி முன்பு வைத்து பார்த்தேன். பேண்ட் சரியாக இருப்பதுபோல் தோன்றியது. ஜேக்கேட் எனக்கு கொஞ்சம் பெரிய சைஸாக இருக்கும் என தோன்றியது. ஆனால், உடைகளை வாங்கும்போது என்னுடைய சைஸை விட பெரிய சைஸை வாங்க வேண்டும், அப்போதுதான் நான் வளரும்போது அது எனக்குப் பொருத்தமானதாக இருக்கும் என என் அம்மா சொல்லியது நினைவுக்கு வந்தது. எனக்கு 24 வயதாகிவிட்டது. நான் இதற்குமேல் வளரப்போவதில்லை என்பதையே நான் மறந்து பெரிய சைஸ் உடைகள் உட்பட நான் தேர்ந்தெடுத்த எல்லா உடைகளையும் வாங்கிவிட்டேன். அதுதான் நான் வாழ்க்கையில் அதுவரை செலவழித்ததிலேயே மிகப்பெரிய தொகை. ஒரு பெரிய பர்ச்சேஸை செய்ததை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது.
என்னிடம் இருந்த எல்லா பணமும் தீர்ந்துவிட்டது. அந்தக் கடையிலிருந்து வெளியே வரும்போதுதான் ஷூக்கள் வைக்கப்பட்ட துறையைப் பார்த்தேன். ஆனால் ஷூக்களை வாங்க என்னிடம் ஒரு ரூபாய் கூட பணம் இருக்கவில்லை. பரவாயில்லை என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதற்கு முன்பு குளிர்காலம் முழுவதும் நான் அணிந்திருந்த ஆரஞ்சு நிற ஷூக்களே அந்த உடைக்கு பொருத்தமானதாக இருக்கும், நான் மேசைக்கு அடியில் என் கால்களை வைத்துக்கொண்டால் யாரும் கவனிக்கமாட்டார்கள் என நினைத்துக் கொண்டேன்.
நேர்காணல் நாளன்று நான் முன்பே வாங்கி வைத்திருந்த பிஸினஸ் சூட் உடையை அணிந்தேன். அப்போது சட்டை எனக்குப் பொருத்தமானதாக இருந்தது. ஆனால் அந்த பேண்ட் நான் நினைத்ததை விட மிகச்சிறியதாக இருந்தது. அந்த ஜேக்கெட் என்மேல் அப்படியே தொங்கிக்கொண்டிருந்தது. என்னிடம் அந்த உடை மட்டும்தான் இருந்தது. துணிகளை எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கான காலம் முடிவடைந்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் அந்த உடைகளை அணிந்தபடியே நான் நேர்காணல் நடைபெறும் இடத்துக்கு சென்றுவிட்டேன். அங்கே ஏற்கெனவே பலரும் நேர்காணலுக்காக காத்திருந்தனர். அவர்கள் நல்ல நேர்த்தியான பொருத்தமான உடைகளுடன் வந்திருந்தனர். அதில் என்னுடன் பள்ளியில் படித்த சிலரும் இருந்தனர். நான் எதையும் கண்டுக்கொள்ளாதவாறு இருந்துக்கொண்டேன். அந்த நேர்காணல், நல்லபடியாகத்தான் சென்றது. ஆனால் நான் அந்த அறையில் இருந்து தோற்கடிக்கக்கப்பட்ட உணர்வோடு, வெட்கத்தோடு வெளியே வந்தேன். அதே கட்டிடத்தில் இருந்த கரியர் டெவலப்மெண்ட் அறைக்கு ஓடினேன். அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக்கொண்டு அங்கிருந்தவரிடம், “என்னைப் பாருங்கள், இப்படித்தான் நான் ஒரு நேர்காணலுக்கு சென்றேன், எல்லாரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள்” என கதறி அழுதுக்கொண்டே சொன்னேன்.
அப்போது, அங்கிருந்தவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ஆமாம்! கொஞ்சம் மோசமாகத்தான் உள்ளது என்றார். என்னிடம் பணம் குறைவாக இருந்தது பற்றியும், என்னுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு உடை வாங்கியதையும் பற்றி அவரிடம் சொன்னேன்.
அப்போது அவர், இந்தியாவில் இருந்திருந்தால் நேர்காணலுக்கு என்ன உடை அணிந்திருப்பீர்கள்? எனக்கேட்டார். புடவையைத் தான் அணிந்திருப்பேன். என்னிடம் நிறைய புடவைகள் வீட்டில் இருக்கிறது என்றேன்.
“எனில் அடுத்தமுறை சேலைக் கட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் யாராக இருக்கிறீரோ அதற்காக உங்களை ஒரு நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் அது அவர்களுடைய இழப்பு. நீங்கள் நீங்களாகவே இருங்கள்” என்றார்.
அன்று மாலை நான் நேர்காணலுக்குச் சென்ற அந்த நிறுவனம் இரண்டு பேருக்கு வேலை வழங்கியது. அதில் நானும் ஒன்று. அப்போதுதான் தகுதி உடையவருக்குத்தான் வாய்ப்பு என்பதை உணர்ந்தேன். எனது கொடூரமான உடைகளைத் தாண்டி நான் என்ன சொன்னேனோ, என்னால அந்த நிறுவனத்திற்கு என்ன பங்களிக்க முடியும் என்பதிலிருந்துதான் அவர்கள் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது.அந்த பணியை ஏற்றுக்கொள்ள எனக்கு 3 வாரகால இடைவெளி இருந்தது.
ஆனால் அதற்குள்ளாக அடுத்ததாக கன்சல்ட்டிங் நிறுவனத்துடன் ஒரு நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. அதை அட்டெண்ட் செய்ய எனக்கு விருப்பமாகவும் இருந்தது. நான் எனக்கு பிடித்த பட்டுப்புடவை அணிந்துக்கொண்டு டெக்சாஸுக்கு நேர்காணலுக்குச் சென்றேன். அங்கிருந்தவர் ஒரு கடுமையான நேர்காணலை என்னிடம் நடத்தினார். நான் என்ன அணிந்திருந்தேன் என்பது பற்றியோ, நான் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறேன் என்பது பற்றியோ அவர் சிறிதும் கவலைப்படாமல் எனது திறமையை மதிப்பிடுவதை உணர்ந்தேன். இறுதியில் எனக்கு அந்த வேலை கிடைத்தது. இந்தியானாவை மையமாகக் கொண்ட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் டெவலப்பிங் ஸ்ட்ரேடஜி டீம்மிற்கு நான் தேர்வுசெய்யப்பட்டேன். அங்கு எல்லா கலந்துரையாடலிலும் என்னை சேர்த்துக்கொண்டு எனக்கு முழுவதும் ஆதரவளித்த ஆண்களின் குழு ஒன்று இருந்தது.
நான் வேலைக்கு தினமும் புடவைதான் அணிந்து சென்றேன். ஆனால் ஒருபோதும் கிளையண்ட்களை சந்தித்ததில்லை. அந்நாட்களில் இந்தியானாபோலிசில் க்ளையண்ட்களை காண என்னைப் புடவையுடன் அழைத்துச் செல்வது எனது சகபணியாளர்களுக்கு உறுத்தலாக இருந்ததை உணர்ந்தேன். அதனால் என்னுடைய அவர்கள் என்னை விட்டுவிட்டுச்செல்வதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
நான் அமெரிக்காவில் ஒரு வேலை செய்யும் பெண்ணாக இருந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
என தன்னுடைய பல்வேறு அனுபவங்களையும், நினைவுகளையும் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் இந்திரா நூயி.