ITR Refund Rules: வருமான வரி தாக்கல் செய்தவர்கள் ரீஃபண்ட் பணம் திரும்பப் பெற 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல்:
2022-23 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. 6.77 கோடி பேர் தங்களது கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 31ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 5.83 கோடி கணக்குகளை காட்டிலும், நடப்பாண்டில் 16.1% கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைத்தாலும், கூடுதல் அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், வருமான வரிதாக்கல் செய்து ரீஃபண்ட் பணம் எப்போது வரும் என அனைவரும் காத்திருக்கின்றனர்.
ரீஃபண்ட் பணம் எப்போது வரும்?
உங்கள் வருமான வரிக் கணக்கை நீங்கள் தாக்கல் செய்தவுடன், வருமான வரி துறை நிதியாண்டில் நீங்கள் கூடுதலாக வரி செலுத்தி இருந்தால் பணத்தைத் திரும்ப கொடுக்கிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்து சரிபார்த்த பிறகு எவ்வளவு நாட்களில் பணத்தை திரும்பப் பெற முடியும் என்று வரி நிபுணர் பல்வந்த் ஜெயின் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ”வழக்கமாக இந்த பணிக்கு 20 முதல் 25 நாட்கள் வரை ஆகும். கடந்த நிதியாண்டை பார்க்கும்போது, 80 சதவீத வரி செலுத்துவோரின் பணத்தை 30 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்பட்டது. அதற்கு குறைவான நாட்களிலையே பணத்தை நீங்கள் இந்தாண்டு திரும்பப் பெறுவீர்கள். பணத்தை திரும்பப் பெறுவது தொடர்பான அனைத்து தகவலையும் வருமான வரித்துறை உங்களுக்கு தெரிவிக்கும். வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு எவ்வளவு பணத்தை திரும்பப் பெறுவீர்கள் என்பதை வருமான வரித்தறை மெசேஜ் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும்" என்றார்.
எப்படி பார்ப்பது?
- முதலில், உங்கள் வருவான வரி ரீஃபண்ட்(Income Tax Refund) நிலையைச் சரிபார்க்க, https://www.incometax.gov.in/iec/foportal/என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- ’வரித் திரும்பப்பெறுதலின் நிலை’ (Status of Tax Refunds) என்பதை கிளிக் செய்து, உங்கள் PAN மற்றும் உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதல் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு ஆண்டை (assessment year-AY) உள்ளிடவும்.
- அதில் உங்கள் ரீபண்ட் தொகையின் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். பின்பு, அந்த தொகை 30 நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கிற்கு திரும்பப் பெறப்படும்.
தரவுகள் தவறாக இருக்கக் கூடாது:
வருமான வரி தாக்கல் செய்யும்போது அளிக்கும் தகவல்கள் உண்மையானதாக இருத்தல் அவசியம். சிலர், அவர்களின் ஆதார் கார்டில் தொடங்கி, அடிப்படை ஆவணங்கள் என அனைத்து தரவுகளின் விவரங்களையும் சரியான நேரத்தில் பதிவு செய்யாமல் இருப்பது மிகவும் தவறானது ஆகும். நீங்கள் அளிக்கும் ஆவணங்கள் உள்ள தகவல்கள் சரியானதாக இருக்க வேண்டும். ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளில் மாறுபட்ட வகையில் தகவல் இருக்கக் கூடாது. மேலும், வங்கி கணக்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்படாமல் இருப்பது, தவறனா தொடர்பு எண்கள், முகவரி, மெயில் ஆகியவை தவறாக இருப்பினும் உங்கள் வருமான வரி ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.