”எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்னும் அவல நகைச்சுவைக்கு தற்போதைய உதாரணம் டெலிகாம் துறை. ஒரு காலத்தில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்த இந்த துறை தற்போது இரு நிறுவனங்கள் ( அரசு நிறுவனமான பிஎஸ்.என்.எல்.-யை தவிர்த்து) என்னும் நிலைமையை நோக்கி செல்கிறது. தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சந்தையில் இருந்தாலும் மூன்றாவதாக வோடபோன் ஐடியா நிறுவனம் இருக்கிறது. ஆனால் அந்த நிறுவனம் சந்தையில் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடுகிறது.


ரிலையன்ஸ் (அனில் அம்பானி), டாடா மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் தோல்வியடைந்த பிறகு வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு நிறுவனங்கள் சந்தையில் இருந்ததன. தனித்தனியாக இருந்தால் போட்டியை சமாளிக்க முடியாது என்னும் காரணத்தால் இந்த இரு நிறுவனங்களும் இணைந்தன. வோடபோன் ஐடியா என பெயர் மாற்றப்பட்டது. புதிய நிறுவனத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு 27 சதவீதமும், வோடபோன் நிறுவனத்துக்கு 45சதவீதமும் ஒதுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு இந்த இணைப்பு தொடங்கியது. 2018-ம் ஆண்டு இந்த இணைப்பு முடிவடைந்தது. அது முதல் இந்த நிறுவனம் பல சிக்கல்களை சந்தித்துவருகிறது. வாடிக்கையாளர்கள் இழத்தப்பது மட்டுமல்லாமல், தொடர்ந்து நஷ்டமும் அடைந்துவருகிறது. 




11 காலாண்டுகளாக நஷ்டம் ஏற்பட்டிருப்பதால்  நிறுவனத்தின் நிதி நிலைமை மிகவும் கவலைக்கு இடமாகவே இருக்கிறது. இந்த நிலையில் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல 25,000 கோடி நிதி திரட்ட கடந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்கள் யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை.


இந்த நிலையில் வோடஃபோன் பிஎல்சி நிறுவனம் வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்யப்போவதில்லை என்றும், ஏற்கெனவே உள்ள பங்குகளை ரைட் ஆப் செய்ய இருப்பதாகவும் அறிவித்தது. அதேபோல ஆதித்யா குழுமமும் மேற்கொண்டு எந்ததொகையை முதலீடு செய்யப்போவதில்லை என அறிவித்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 4-ம் தேதி வோடஃபோன் ஐடியா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து குமார் மங்கலம் பிர்லா ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.


மேலும் இந்த வோடஃபோன் மற்றும் ஆதித்யா பிர்லா ஆகிய இரு நிறுவனங்களும் வோடஃபோன் ஐடியாவின் பங்குகளை அரசு, பொதுத்துறை நிறுவனம் அல்லது வேறு தனியார் நிறுவனத்துக்கு இலவசமாக வழங்க இருக்கிறோம் என கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஆனால் இதுகுறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.


ரூ.1.80 லட்சம் கோடி கடன்: இந்த நிறுவனத்தில் யாரும் முதலீடு செய்ய முன்வராதற்கு இந்த நிறுவனத்தின் கடன் ஒரு முக்கிய காரணம். ஆனால் அதுமட்டுமே காரணமல்ல.  இந்த நிறுவனத்திடம் 1.80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கிறது. மொத்தம் 27 கோடி வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்கிறார். வாடிக்கையாளர்கள் சந்தை குறைவாக இருக்கும் பட்சத்தில் இவ்வளவு பெரிய கடனை அடைக்க முடியாது.


அதேபோல இந்த நிறுவனத்தை யாரும் விரும்பமாட்டார்கள். ஒரு ஸ்டீல் நிறுவனம் அல்லது எந்ததுறை நிறுவனமாக இருந்தாலும் மற்றொரு நிறுவனம் வாங்க விரும்பும். ஆனால் இங்கு வாடிக்கையாளர்களே பிரதானம். ஏர்செல் நிறுவனத்தை யாரும் வாங்கவில்லை. அந்த நிறுவனம் மூடப்பட்டால் எப்படியும் வாடிக்கையாளர்கள் (தற்போது 27 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்) எதாவது ஒரு டெலிகாம் நிறுவனத்துக்கு மாறிதான் ஆகவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்காக பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் என போட்டி நிறுவனங்கள் நினைக்கும். ஏர்செல் விஷயத்தில் அதுதான் நடந்தது. வாடிக்கையாளர்கள் உடனடியாக மாறினார்கள்.




வோடஃபோன் நிறுவனத்தின் பங்குகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தாலும் யாரும் முன்வராததற்கு இதுதான் காரணம்.  பி.எஸ்.என்.எல்-க்கு இலவசமாக கொடுக்கிறது என்றாலும் கூட கடனும் இலவசமாக செல்லும். அந்த கடனை அடைப்பதற்கு பதிலாக அந்த தொகையை வைத்து வேறு விஷயங்களை செய்யலாம் என நிறுவனங்கள் நினைப்பது இயல்பே. இதுவரையில் டெலிகாம் துறையில் இதுதான் நடந்திருக்கிறது.


இரு நிறுவனங்கள் இணையும்போது ஒரு பங்கின் விலையாக ரூ34 என இருந்தது. தற்போது ரூ. 5.95 என்னும் விலையில் வர்த்தகமாகி வருகிறது. தொடர்ந்து சரிந்து வரும் சூழலில் மேலும் சரியக்கூடும் என்றே சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த நிலையில் இந்திய சந்தைக்கு இரண்டு நிறுவனங்கள் மட்டுமே போதாது என ஏர்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்திருக்கிறார். இந்த துறைக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் தங்கள் நிறுவனத்தின் சார்பாகவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.


வங்கிகளுக்கு இழப்பு: வோடஃபோன் ஐடியா சிக்கல் என்பது அந்த நிறுவனத்துடன் முடியப்போவது கிடையாது. ரூ.1.80 லட்சம் கோடி கடனில் சுமார் ரூ.28,700 கோடி அளவுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கடன் கொடுத்திருக்கின்றன.  (மீதமுள்ள தொகை அரசாங்கத்துக்கு செல்ல வேண்டிய தொகை, அதன் காரணமாகவே பிஎஸ்என்எல் நிறுவனம் வாங்கும்பட்சத்தில் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய தொகை குறித்து கவலைகொள்ள தேவையில்லை என வோடபோன் ஐடியா கருதுகிறது.) எஸ்பிஐ வங்கி அதிகபட்சமாக ரூ11,000 கோடி கொடுத்திருக்கின்றன.  இதனை தொடர்ந்து யெஸ் வங்கி (ரூ4000 கோடி) இண்டஸ் இந்த் (ரூ 3,500 கோடி) கடன் கொடுத்திருக்கின்றன.




ஆனால் எஸ்பிஐ வங்கியின் பாதிப்பு குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி கொடுத்திருக்கும் மொத்த கடனில் 2.9 சதவீதம் (ரூ.2000 கோடி) இந்த நிறுவனத்துக்கு கொடுத்திருப்பதால் இந்த வங்கிக்கு பெரும் பாதிப்பு இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கடும் சிக்கலில் இருக்கும் யெஸ் வங்கியும் கணிசமான சதவீதம் அளவுக்கு இந்த நிறுவனத்துக்கு கடன் வழங்கி இருக்கிறது.


9,500 பணியாளர்கள்: நிறுவனம் முதலீடு செய்ய தயங்குவது, குமார் மங்கலம் பிர்லா வெளியேறி இருப்பது உள்ளிட்ட காரணங்களால் பணியாளர்கள் கவலையில் உள்ளனர். அதனால் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, பணியாளர்கள் யாரும் கவலைப்படவேண்டாம் என அனைவருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்.


அரசாங்கத்துக்கு இழப்பு, வங்கிகளுக்கு இழப்பு, பணியாளர்களுக்கு இழப்பு, வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி மற்றும் வோடபோன் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு முதலீடு செய்த தொகை இழப்பு, நிறுவனத்தின் இதர முதலீட்டாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் என பலருக்கும் இழப்பு.


ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சியில் இவ்வளவு பெரிய சிக்கலை சந்திக்க இருக்கிறோம். தவிர 130 கோடி மக்கள் இரு நிறுவனங்களை மட்டுமே சார்ந்து இருப்பதும் நல்லதல்ல. ஆனால் இந்திய சந்தை இரு டெலிகாம் நிறுவனங்களுக்காக மட்டுமே மாறிவருகிறது என்பது எதார்த்தம்.