UPI Payment: மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. 


யுபிஐ பரிவர்த்தனை:


இன்றைக்கு அனைவரது கையிலும் ஆண்ட்ராய்டு போன்கள் இருக்கிறது. இதற்கேற்றவாறு அனைத்து துறைகளும் ஸ்மார்ட் ஆன வசதிகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த வகையில் பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய UPI (Unified Payments Interface) வசதியும் உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு 21 வங்கிகளுடன் UPI முறையை என்.சி.பி.ஐ. தொடங்கியது.


ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஆண்ட்ராய்டு போன்கள் வந்துவிட்ட பிறகு UPI வசதி என்பது அசுர வளர்ச்சி அடைந்து விட்டது. அதற்கேற்ப Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகளும் நடைபாதை வியாபாரம் தொடங்கி பெரிய பெரிய வணிகம் வரை யுபிஐ பயன்பாட்டை அதிகரித்துள்ளது. மத்திய அரசும், வங்கிகளும் பயனாளர்களின் வசதிகளை மேற்படுத்துவதற்காக யு.பி.ஐ தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.  அதன்படி, தற்போது ஒரு வசதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. 


ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம்:


அதன்படி, மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.  முன்னதாக, ரூ.1 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை வரம்பு இருந்த நிலையில், தற்போது ரூ.5 லட்சம் வரை நீடித்துள்ளது. 






இதுகுறித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ”பல்வேறு வகை யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான  யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1 லட்சமாக இருந்த நிலையில், ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கல்வி மற்றும் மருத்துவமனைக்காக பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு உதவும். ஹோட்டல் முன்பதிவு, விமான டிக்கெட்டுகள், இ-காமர்ஸ் போன்றவைகளில் யுபிஐ பரிவர்த்தனை அதிகமாக உள்ளது” என்றார். 


முன்னதாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 6.5 சதவீதமாக  தொடரும் என்று ஆர்பிஐ அறிவித்திருந்தது. இதனால்,  வீட்டுக் கடன், வாகன கடன், நகை கடன், பர்சனல் லோன் என அனைத்து கடனுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.