மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி இன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதற்கான கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்கத் திட்டமிடவில்லை எனத் தெரிவித்துள்ளார். 


க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதற்காக மத்திய அரசு தரப்பில் கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதிலளித்துள்ளார். 


மேலும், க்ரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்கள் மக்களைத் தவறான வழியில் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்த கொள்கை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா எனக் கேட்கப்பட்ட போது, இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, `மத்திய அரசு, ரிசர்வ் வங்கியும் வாடிக்கையாளர், முதலீட்டாளர் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு க்ரிப்டோ கரன்சியைப் பயன்படுத்துபவர்களுக்கு அதுதொடர்பாக இருக்கும் பொருளாதார, நிதி, நிர்வாக, சட்ட சிக்கல்களும், பாதுகாப்புக் குறைபாடுகளும் ஏற்படுவது குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது’ எனக் கூறியுள்ளார். 


நாடு முழுவதும் க்ரிப்டோ கரன்சி கறுப்புப் பணப் பரிமாற்ற விவகாரங்களில் பயன்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி இணையக் குற்றவாளிகளால் க்ரிப்டோ கரன்சி பயன்படுத்தப்படுவது குறித்து சட்ட அமலாக்க அமைப்புகளிடம் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். `மத்திய அமலாக்கத்துறை சார்பில், இதுவரை பண மோசடி வழக்கின் கீழ் கறுப்புப் பணப் பரிமாற்றத்திற்காக க்ரிப்டோ கரன்சியைப் பயன்படுத்தியதாக 7 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. க்ரிப்டோ கரன்சியைப் பயன்படுத்தி குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறியுள்ளார். 


மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டிருப்பதன்படி, சுமார் 135 கோடி ரூபாய் மதிப்பிலான குற்ற நடவடிக்கைகள் க்ரிப்டோ கரன்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை இதுவரை கண்டறிந்துள்ளது. 


மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, `அமலாக்கத்துறை இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகளில், சில பரிவர்த்தனைகளில் கறுப்புப் பணத்தைப் பரிமாற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த சிலரும், அவர்களது இந்தியக் கூட்டாளிகளும் ஈடுபட்டுள்ளனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறியுள்ளார். 


`2020ஆம் ஆண்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்ட பணத்தை சில வெளிநாட்டு நிறுவனங்களுக்காக க்ரிப்டோ கரன்சியாக மாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பண மோசடி விவகாரங்களில் இதுவரை சுமார் 135 கோடி ரூபாய் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்றும் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார். 


இந்த வழக்குகள் சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் எதிர்கொள்ளப்பட்டு வருவதாக இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறியுள்ளார்.