தங்கம், வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது.


மத்திய பட்ஜெட் 2024:


மத்திய பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 4 இலக்குகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த நிதியமைச்சர் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு,  4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி, ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு,புதிய வரி விதிப்பு முறையில் வரி சதவிகிதம் மாற்றம்,ஏஞ்சல் வரி ரத்து உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்றிருந்தன. 


சுங்க வரி (Customs duty Tax) குறைப்பு:


புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துப் பொருட்களுக்கு சுங்க வரி முற்றிலும் விலக்கு அறிக்கப்பட்டுள்ளது. செல்போன், சார்ஜர், செல்போன்களுக்கான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 20 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக  குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், தங்கம், வெள்ளி, பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 6.4 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.


தங்கம் விலை சரிவு: 


தங்கம்,வெள்ளி ஆகியவற்றிற்காக சுங்க வரி குறைக்கப்பட்டது சந்தையில் அதன் தேவையை அதிகரித்துள்லது. Multi Commodity Exchange (MCX) 10 கிராம் தங்கம் விலை ரூ.72,838-ல் இருந்து ரூ.68,500/- ஆக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ரூ.4,000 ஆக குறைந்துள்ளது. தங்கம் ஒரு அவுன்ஸ் 2,397.13 டாலராக உள்ளது.எம்.சி.எக்ஸ்.ல் வெள்ளி விலை கிலோ ஒன்றிற்கு ரூ.88,995-ல் இருந்து ரூ.84,275 ஆக குறைந்துள்ளது. 


தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ. 52,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 


22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.6,550  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,040 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,005 ஆகவும் விற்பனையாகிறது.


வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)


அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.3.50 குறைந்து ரூ.92.50 க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.92,500 ஆக விற்பனையாகிறது. 


தங்கம் விலை தொடர்பாக விற்பனையாளர் ஒருவர் தெரிவிக்கையில்,” சுங்க வரி 6 சதவிகிதமாக குறைந்துள்ளது முக்கியமான ஸ்டெப். 9 சதவிகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில் தற்போதைய அறிவிப்பு சில்லறை வர்த்தகத்தில் விலை சரிவை ஏற்படுத்தியுள்ளது. 10 கிராம் தங்கம் விலை ரூ.67,000 வரை குறைய வாய்ப்பிருக்கிறது.”என்று தெரிவித்துள்ளார். 


இன்னொரு விற்பனையாளர் தெரிவிக்கையில்,” மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலி சந்தையில் உடனே பிரதிபலித்தது. தங்கம் விலை குறைவு முதலீட்டளார்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வதற்கு சரியான நேரம்.” என்று தெரிவித்தார்.