2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வரும் நிலையில் நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (ஜன.31) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (பிப்.01) 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
இந்த நிலையில் ”உள்நாட்டு விமான சேவைகளை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 50 கூடுதல் விமான நிலையங்கள் அமைக்கப்படும், ஹெலிபாட்கள், வாட்டர் ஏரோ ட்ரோன்கள், மேம்பட்ட தரையிறங்கும் மைதானங்கள் புதுப்பிக்கப்படும்” என நிர்மலா சீதாராமன் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
விமான நிலையங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவித்தபோது, புதிய விமான நிலையங்கள் அதானிக்காக எழுப்பப்படுகிறதா என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
மேலும், “ சுதந்திரத்தின் 75வது ஆண்டில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தில் இந்தியா ஒளிரும் நட்சத்திரம். கடந்த பட்ஜெட்டுகள் அமைத்த அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட் ஆக இந்த பட்ஜெட் அமையும். நடப்பாண்டில் இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை காணும். மற்ற நாடுகளை விட இது அதிகம்.
இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பதை உலக நாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பட்ஜெட் இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பட்ஜெட் ஆகும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை மக்களுக்கு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.” இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் 7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது” என நிர்மலா சீதாரமன் முன்னதாகத் தெரிவித்தார்.