இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது அவசியம் என ஆலோசனை கூறுகிறார் தனியார் வங்கித் தலைவரும் தொழிலதிபருமான உதய் கோட்டக். இப்போதைக்கு நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட உத்தரவிடுவது தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிக்கு ஸ்டீராய்டு அளிப்பது போன்று அவசியமானது என்று அவர் கூறியிருக்கிறார்.

கோட்டக் மகிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநரும், நிறுவனரும், சிஐஐ எனப்படும் இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவருமான கோட்டக் ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார்.

அவரது நீண்ட பேட்டியிலிருந்து சில முக்கியத் துளிகள்...



 

 

இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது அவசியம். அதேவேளையில், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். ஏழை மக்கள் அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் அரசாங்கம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியுதவி செலுத்த வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியளிக்க வேண்டும். ஏழை எளிய மக்களின் கைகளில் பணம் புரள்வதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தத் தருணத்தின் ரிசர்வ் வங்கியின் உதவி அவசியமாகிறது. இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க ஆர்பிஐ புதிதாக நோட்டுகளை அச்சடிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான காலகட்டம். அடுத்த ஓராண்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் காலம். 

 



கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 முதல் 8 சதவீதம் வரை குறைந்தது. கொரோனா இரண்டாவது அலைக்கு முன்னதாக பொருளாதார வளர்ச்சியானது 10 சதவீதமாக இருந்தது. உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பெருந்தொற்று பரவலுக்கு முன்னதாக நாட்டின் பணவீக்கம் எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்துவிட்டது. 2010ம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக (மொத்த விலைக் குறியீடு) wholesale price index 10.5 சதவீதமாக அதிகரித்தது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.4 சதவீதமாகவும், ஏப்ரலில் 10.5 சதவீதமாகவும் அதிகரித்தது.

இந்நிலையில் இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாகவே இருப்பதால் இப்போது புதிதாக நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுவது நல்ல முடிவே. இது திணறிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்துக்கு ஆக்சிஜன் அளிக்கும் செயல். குறுகிய கால ஸ்டீராய்டு என்று கூட சொல்லலாம்.

 



பொருளாதாரத்தின் அடித்தளத்தில் இருப்பவர்கள், சிறு, குறு தொழில்களை நேரடி நிதியுதவி மூலம் மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நான் உணர்கிறேன்.

Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) போன்ற திட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கம் பல சிறு, குறு தொழில்களின் மீட்சிக்கு உதவ முடியும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த அவசர கால கடன் உதவி (இசிஎல்ஜிஎஸ்) திட்டத்தினை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்.

ஒருவேளை அரசாங்கமும் நான் யோசிக்கும் இதே பாதையின் சாத்தியத்தை ஆராய்ந்து கொண்டிருக்கலாம். இரண்டாவது அலையின் நெருக்கடி சற்றே குறைய அரசாங்கம் காத்திருக்கலாம்.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கிறது. முதல் அலையில் எனது வங்கி ஊழியர்கள் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இரண்டாவது அலையில் இதுவரை 45 முதல் 50 ஊழியர்கள் வரை உயிரிழந்துள்ளனர். 



 

கொரோனாவால் தொழில்துறையில் இருவித பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்றை சரிசெய்துவிடலாம். இரண்டாவது வகையான துறையை சரிவிலிருந்து மீட்பது கடினம். நான் எனது நிறுவனத்தில் இந்த ஆண்டு சம்பளக் குறைப்பு, ஆட் குறைப்பு நடவடிக்கைகளை செய்யவில்லை. ஊழியர்களுக்கான ஊதிய உயர்வையும் நிறுத்தவில்லை. எனது ஊழியர்களின் நிதி இருப்பு நிலையை உறுதி செய்வது தேசத்தின் நிதி இருப்பு நிலையை உறுதி செய்வதற்கு சமமாக முக்கியமானதே. எனது வங்கு ஊழியர்கள் பலரும் வீட்டிலிருந்துதான் பணி புரிகிறார்கள். எந்தெந்தப் பகுதிகளில் பாசிட்டிவிட்டி ரேட் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறதோ அங்குமட்டுமே ஊழியர்கள் வங்கிக்கு வந்து பணி புரிகின்றனர்.

கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசியே பேராயுதம். இப்போதைக்கு தடுப்பூசி விநியோகத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மூன்றாவது அலையில் சிக்காமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். அதேவேளையில், மருத்துவ ஆக்சிஜன், படுக்கை வசதிகள், அத்தியாவசிய மருந்துகள் போன்ற மருத்துவ கட்டமைப்பை சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். நமது இலக்கு எப்போதும் மிகப்பெரிய சிக்கலை சமாளிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட வேண்டுமே தவிர சராசரிப் பிரச்சினைகளுக்கான தீர்வாக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.