சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க்கிற்கு விற்பனை செய்வதற்கான இறுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று செய்திகள் வந்துள்ளன. இன்று அதற்கு ஒரு ஒப்பந்தத்தை எட்டலாம் என்று வெளியாகியுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ட்விட்டரில் மிகப் பெரிய பங்குதாரர்களில் ஒருவர் என்று இந்த மாத தொடக்கத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட மஸ்க், இந்த தளத்தை ஒட்டுமொத்தமாக 43 பில்லியன் டாலர்களுக்கு வாங்க முன்வந்துள்ளார்.
ட்விட்டர் இந்த சலுகையை ஏற்கத் தயாராக உள்ளது என்றும் ஒப்பந்தம் இன்று பிற்பகுதியில் எட்டப்படலாம் என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கைகளுக்கு எலன் மஸ்க் தரப்பில் இருந்தும், ட்விட்டர் தரப்பில் இருந்தும் இன்னும் பதில் வரவில்லை. எனினும் இது பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டதாகவே, முக்கிய தரப்புகள் தகவல் தெரிவிக்கின்றன
ஏப்ரல் 14 அன்று ஒரு ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில், ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். சமீபத்தில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் தனிநபர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார். ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லருக்கு அனுப்பிய கடிதத்தில் மஸ்க் கூறுகையில், "உலகம் முழுவதும் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக திகழும் ட்விட்டரில் நான் முதலீடு செய்துள்ளேன், மேலும் பேச்சு சுதந்திரம் ஒரு சமூகத்தின் கட்டாயம் என்று நான் நம்புகிறேன். இதன் விளைவாக, ட்விட்டரில் 100% ஐ ஒரு பங்கிற்கு $54.20 ரொக்கமாக வாங்குகிறேன், ட்விட்டரில் முதலீடு செய்யத் தொடங்குவதற்கு முந்தைய நாளில் 54% பிரீமியம் மற்றும் எனது முதலீடு பகிரங்கமாக அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாளில் 38% பிரீமியமாக வாங்குகிறேன்", என்று அவர் எழுதியிருந்தார்.
ஒப்பந்தம் மூலம் விற்பனை செய்யப்படாவிட்டால், ட்விட்டரில் உள்ள தனது பங்குகளை விற்றுவிடுவேன் என்று மஸ்க் ஒரு மறைமுக அச்சுறுத்தலையும் வெளியிட்டார். "இந்த விலை என்னால் முடிந்த அளவு அதிகமாக தரப்படும் விலை ஆகும், இதற்கு மேல் உயர்த்தி தர முடியாது, அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், பங்குதாரராக எனது நிலையை மறுபரிசீலனை செய்ய நேரிடும்." என்று கூறியிருந்தார். ஏப்ரல் 2 அன்று, நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார், இதனால் அவர் மிகப்பெரிய தனிப்பட்ட பங்குதாரராக மாறினார்.
ஏப்ரல் 24 அன்று வெளியிடப்பட்ட ராய்ட்டர்ஸ் அறிக்கையில் ட்விட்டரின் குழு, 43 பில்லியன் டாலர் சலுகையை பங்குதாரர்களின் கடுமையான அழுத்தத்தின் கீழ் மஸ்க் உடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததாகக் கூறியது. நீண்ட கால பங்குதாரர்கள், குறியீட்டு நிதிகளுடன் சேர்ந்து ட்விட்டர் பங்குகளின் மிகப்பெரிய பகுதியைக் கொண்டுள்ளனர், அதிக விலை எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர், சிலர் ஒரு பங்குக்கு $60 வீதம் எதிர்பார்க்கின்றனர் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது. ட்விட்டரின் தலைமை நிர்வாகியான பராக் அகர்வாலுக்கு, நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பை உயர்த்த கூடுதல் அவகாசம் கொடுக்க அவர்கள் அதிக விருப்பம் காட்டுகின்றனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.