பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் இருந்து பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகளை பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தரும்  வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து பாலின வித்தியாசமின்றி 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். இந்த சட்டம் வருவதற்கு முன்பு குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த பிரிவுகள் குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளை கையாண்டன. தற்போது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் பாலின வித்தியாசமின்றி போக்சோ சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். இதேபோல் சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும் இந்த சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல் அல்லது வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாச படம் எடுக்க குழந்தையை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான குற்றங்களை இந்த சட்டம் முன்வைக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும்.

 



 

மேலும் நீதிமன்றம்  தண்டனை நிரூபணம் ஆகும் பட்சத்தில் சாதாரண சிறை தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனை வரை கிடைக்க இந்த சட்டத்தில் வழிவகை உள்ளது. இதில் 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி இருந்தால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது குறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை  ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் பேசுகையில், போக்சோ வழக்குகளை பொறுத்தவரை மத்திய மண்டலத்தில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்படுகிறது. மத்திய மண்டலத்தில் தான் முதன்முறையாக போக்சோ வழக்கில் தொடர்புடைய நபரை சரித்திர பதிவேடு (ரவுடி பட்டியல்) குற்றவாளியாக சேர்த்துள்ளோம். மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட ஒரு வழக்கில் குற்றவாளி விடுதலையானால் அவர் என்ன காரணத்துக்காக விடுதலை செய்யப்பட்டார். சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறினார்களா?. பிறழ்சாட்சிகளின் பின்புலம் என்ன?. அவர்களை யாரேனும் மிரட்டினார்களா?. வழக்கு தொடங்கியது முதல் இறுதி வரை வழக்கின் போக்கு எவ்வாறு சென்றது என அனைத்து விஷயங்களையும் கண்டறிந்து, அதில் முறைகேடு நடந்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட ஏராளமானோருக்கு போக்சோ சட்டம் குறித்தும், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண் குழந்தைகளுக்கு தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி? என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம்.

 



 

மேலும்  மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் பெற்றோர் இல்லாத அனாதை குழந்தைகள், மதுவுக்கு அடிமையான சிறார்கள், பெற்றோரால் துன்புறுத்தப்படும் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் ஆகியோர் கொண்ட விவரங்களை அந்தந்த பகுதிகளை சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் மூலம் சேகரித்து வருகிறோம். அவ்வாறு உள்ள குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? என ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள பெண் காவலர்கள் மூலம் வாரந்தோறும் நேரில் சென்று விசாரித்து வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்பட 9 மாவட்டங்களில் கடந்த 2020-ம் ஆண்டு 421 போக்சோ வழக்குகளும், இதேபோல் 2021 ஆம் ஆண்டு 659 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 128 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் திருச்சி சரகத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் 9 போக்சோ வழக்குகளிலும், தஞ்சை சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் 2 போக்சோ வழக்குகளிலும் கோர்ட்டில் விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்பட்டுள்ளன.

 

மாவட்டங்கள் வாரியாக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளின் விவரம்

 

கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 3 மாதத்தில் திருச்சி சரகத்தில் 9 போக்சோ வழக்குகள், தஞ்சை சரகத்தில் 2 போக்சோ வழக்குகள் என 11 வழக்குகளில் நீதிமன்றத்தில்  விசாரணை முடிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 906 கிராமங்களில் 20 ஆயிரத்துக்கு 542 விழிப்புணர்வு கூட்டங்கள், முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு முகாம்களில் 14 ஆயிரத்து 762 தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட்டு, 46 லட்சத்து 8 ஆயிரத்து 10 பேர் பங்கு பெற்றுள்ளனர் என்றார்.