ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதை உறுதிசெய்ததையடுத்து ட்விட்டர் சிஇஓ பரக் அக்ராவல் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் ஆகியோர் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்..


பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை உலகில் பலகோடி பயனாளர்கள் பயன்படுத்திவருகின்றனர். இந்நிறுவனத்தின் 9.2% பங்குகளை டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவும், உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க் வைத்திருந்தார். அதன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டரை முழுவதுமாக வாங்கினார். இந்த விவகாரம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிடுவதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார் எலான் மஸ்க். இதனையடுத்து நீதிமன்றத்தில் ட்விட்டர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ட்விட்டர் நிறுவனம் கூறியதை விட 4 மடங்கு போலி கணக்குகள் உள்ளது என்றும் தேவையற்ற செலவுகளால் லாபமற்ற நிறுவனமாக ட்விட்டர் இயங்கி வருகிறது. போலி கணக்குகள் குறித்த கேள்விகளுக்கு ட்விட்டர் நிர்வாகம் பதிலளிக்கத் தவறிவிட்டது என்றும் எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்தார்.


ட்விட்டரை வாங்குவாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கான விடை இழுபறியாகவே இருந்துவந்த நிலையில் தற்போது ட்விட்டரை மஸ்க் வாங்குவது உறுதியாகியுள்ளது. ட்விட்டரை  வாங்குவதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தி சிஇஓவான பரக் அக்ராவல், சட்டம், கொள்கை மற்றும் அறக்கட்டளையின் தலைவர் விஜய கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் ஆகியோர் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து வெளியேறினர். இனி மீண்டும் திரும்பப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். 


சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ட்விட்டரில் பணிபுரிந்து வந்த பரக் அக்ராவல், கடந்த ஆண்டு நவம்பரில் அந்நிறுவனத்தின் சிஇஓவாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டு முதல் சிஇஓ-வாக இருந்த ஜாக் டோர்ஸே விலகியதை அடுத்து இந்தியரான பரக் அக்ராவல் நியமனம் செய்யப்பட்டார். 2018ம் ஆண்டு முதல் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்ற பரக் அக்ராவலுக்கு, கடந்த ஆண்டு தான் சிஇஓ பொறுப்பு தேடிவந்தது. ஆனால், சில மாதங்களுக்குள்ளாக ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதால் பரக் அக்ராவல் அந்த பொறுப்பில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதோடு, ட்விட்டரின் நிர்வாகம் மீது அதிருப்தி தெரிவித்திருந்த மஸ்க், தான் ட்விட்டரை வாங்கியவுடன் பலருக்கு வேலை போகும் என்பதையும் முன்பே தெரிவித்திருந்தார். அதோடு சமீபத்தில் கூட ட்விட்டரின் 75% பணியாளர்களை நீக்க இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், ட்விட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்தும் பணி முடிவடைந்த நிலையில் பரக் அகர்வால் உள்ளிட்ட நிர்வாகிகளை மஸ்க் பணி நீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ட்விட்டரின் தலைமையகத்திலிருந்து பரக் அக்ராவல் வெளியேறியுள்ளார். 


ஆனால் ட்விட்டர் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பரக் அக்ராவல் வெறும் கையுடன் வெளியேறப்போவதில்லை. ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அவருக்கு சுமார் 42 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது