செல்போன் ரீசார்ஜ் திட்டங்களுக்கான புதிய விதிகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் - ஐடியா ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் கீழும் கோடிக்கணக்கான பயனாளர்கள் இருந்து வருகின்றனர். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின் படி வாடிக்கையாளர்களுக்கு தேவையான ரீசார்ஜ் கட்டணம் தொடங்கி ஸ்பேம் அழைப்புகளை அறிந்து கொள்வது வரை பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது செல்போன் நிறுவனங்களுக்கான விதிகளை மாற்றும். தற்போது ரீசார்ஜ் திட்டங்களுக்கான விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
ரீசார்ஜ் திட்டங்களைப் பொறுத்தவரை இணைய வசதியுடன் மாதாந்திர, 3 மாதம், 6 மாதம், ஒரு வருடம் வரையிலான திட்டங்கள் கணக்கிடப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதில் ஒரு மாதம் 28 நாட்கள் என கணக்கிடப்படுவதால் வருடத்திற்கு 12 முறைக்கு பதிலாக 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இது வாடிக்கையாளர்களை மிகப்பெரிய சிரமத்தில் தள்ளியது. தற்போது திருத்தம் செய்துள்ள மாற்றங்களின்படி, “இணைய வசதி இல்லாமல் அதற்கேற்ப கட்டணங்களைக் குறைத்து அதிக ரீசார்ஜ் தேர்வுகளை வழங்க வேண்டும். இந்த மாற்றங்கள் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட பயனர்களுக்கு வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வீட்டில் வைஃபை வசதி வைத்திருப்பவர்கள், சாதாரண செல்ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு நன்மையளிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டாவுடன் கூடிய தொகுப்புத் திட்டங்களை 28 நாட்களுக்கு பதிலாக 30 நாட்கள் வழங்க வேண்டும். வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்கள் மட்டுமே இருக்கும்படியாக தொகுப்பு இருக்க வேண்டும். இவை அனைத்தும் குறைந்த விலையில் செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாய்ஸ் மற்றும் மெசெஜ் மட்டுமே இருக்க வேண்டிய திட்டங்களுக்கு மிகக் குறைந்த கால அளவுடன் திட்டம் வைத்துள்ளது. இணைய வசதியுடன் கூடிய திட்டத்திற்கு அதிக கால நீட்டிப்பு செய்கிறது. இதனையெல்லாம் கவனித்த பின் தான் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.299 திட்டத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்தால் வருடத்திற்கு ரூ.3,887 செலவாகும். அதே விலையில் 30 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு திட்டம் இருந்தால் 360 நாட்களில் 12 ரீசார்ஜ்களுக்கு ரூ.3,588 செலவாகும். இதனால் ரூ.300 வரை செலவு குறையும். இந்த அறிவிப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் அல்லது ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. எனினும் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
