குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்துவது கட்டாயமானது. வருமான வரி ஈட்டுபவர்களுக்கு சில விலக்கு அளிப்பட்டு வந்த நிலையில், வருமான வரித்துறை தற்போது அதை நீக்கியுள்ளது.
2021-22 நிதியாண்டிற்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2022 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் தனிநபர்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
காலக்கெடுவைத் தவறவிட்டால், அபராத தொகையுடன் வருமான வரியை செலுத்த வேண்டியிருக்கும். அல்லது வருமான வரி துறையால் உங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம். தனிநபரின் வருமானம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலக்கு வரம்பை விட அதிகமாக இருந்தால், அந்த நபர் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
புதிய வரி கொள்கையின் கீழ் வருமான வரி தாக்கல் செய்ய விரும்புவோர், 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் ஆண்டு வருமானம் ஈட்டினால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பழைய வரி கொள்கையின் கீழ், 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விலக்கு வரம்பு 2.5 லட்சம் ரூபாயாகும். 60 முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கு (மூத்த குடிமக்கள்) விலக்கு வரம்பு 3 லட்சம் ரூபாயாகும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு (மிக மூத்த குடிமக்கள்) 5 லட்சம் ரூபாய் விலக்கு வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, நிதியாண்டில் மொத்த TDS/TCS (ஆதாரத்திலிருந்து கழிக்கப்படும் வரி/ ஆதாரத்திலிருந்து வசூலிக்கப்படும் வரி) தனிநபர்களுக்கு 25,000 ரூபாய்க்கு அதிகமாகவும், மூத்த குடிமக்களுக்கு 50,000 ரூபாயாகவும் இருந்தால், அவர்களும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, மூத்த குடிமக்களுக்கு வணிக வருமானம் இருந்தால் மட்டுமே அவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். தற்போது அந்த விதி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சேமிப்பு வங்கிக் கணக்கில் ஒரே ஆண்டில் 50 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலாக டெபாசிட் செய்த நபர்கள் கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்