பொதுவாக தேனி மாவட்டத்திலிருந்து துபாய், ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு  வாழை அதிக அளவில் ஏற்றுமதியாகும் . தற்போது வெளிநாட்டு போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் அதிகரித்து உள்ளதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பாதிப்பு உள்ளதாக  உள்ளூர் விவசாயிகள் கூறி வருகின்றனர்.மேலும்  உள்ளூரில் விளையும் ஜி9 உள்ளிட்ட உயர் ரக வாழைகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகாத நிலையில், வேறு வழி இல்லாமல் குறைந்த விலைக்கு கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்வதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். இதனால் வாழை விவசாயத்தில் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக புலம்புகின்றனர்.




 தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டமான தேனி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதிலும் நெல், வாழை, தென்னை, திராட்சை உள்ளிட்டவைகள்  அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.  குறிப்பாக வாழை விவசாயத்தில் நேந்திரம் ,பூவன், பச்சை, செவ்வாழை உள்ளிட்ட ரகங்கள் அதிகமாக பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர் . மேலும் தேனி மாவட்ட மக்கள் கம்பத்தை மையமாக வைத்து,  அருகில் உள்ள கேரள மாநிலத்திற்கு வாழைகளை அதிகளவில் ஏற்றுமதி  செய்து வருகின்றனர்.



 குறிப்பாக கம்பத்தில் இருந்து அதிக அளவில் தூத்துக்குடி மற்றும் கொச்சின் உள்ளிட்ட ஊர்களுக்கும், வெளிநாடுகளான   துபாய், ஈரான் போன்ற நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம் .  தற்போது ஊரடங்கு  கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில் மாநில போக்குவரத்துக்கு இடையே கடும் கட்டுப்பாடு உள்ளது எனலாம்.



    உள்ளூர் ரக வாழையை மொத்தமாக கொள்முதல் செய்ய ஆளில்லாத நிலை உள்ளதால் தற்போது வாழை ஏற்றுமதியில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு மாதமாக  பெய்து வரும் பருவ மழை மற்றும் கடும் காற்று போன்றவற்றால் உள்ளூர் ரக வாழைகள் வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் எண்ணற்ற வாழை மரங்கள் சாய்ந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.




 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாத நிலையில், தற்போது  உள்ள சூழலில் கிடைக்கும்  வாழைகள் அருகில் உள்ள கேரளா மாநிலத்திற்கு மொத்த விலைக்கு மிகக் குறைந்த விலைகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கிடைக்கும் வாழைகள் கம்பத்தில்  உள்ள வாழை பதப்படுத்தும் மையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டு பின் வாழைகள் பதப்படுத்தப்பட்டு கண்டெய்னர் லாரி மூலம் கொச்சின் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.  வாழையில் தற்போது போதுமான வரத்து கிடைக்காததால் வாழை விவசாயம் மற்றும் வியாபாரத்தில் பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக இப்பகுதி விவசாயிகளும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.


ஊரடங்கில் விவசாய பணிகளுக்கு எந்த இடையூறு இல்லை என்றாலும்,  வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் விவசாயம் செய்வதிலும்,  விவசாயத்தில் கொள்முதல் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.