யுனிகார்ன் கிளப் -1


ஜொமோட்டோ


ஸ்டார்ட் அப் உலகை கவனித்துவருபவர்கள் யுனிகார்ன் என்னும் வார்த்தை குறித்து கேள்விபட்டிருக்க கூடும். 1 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை அடைந்த நிறுவனத்தை யுனிகார்ன் நிறுவனம் என அழைப்பார்கள். அதாவது சுமார் 7500 கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பு இருக்கும் நிறுவனங்கள் யுனிகார்ன் என்று அழைக்கப்படும். வழக்கமான தொழிலில் இருக்கும் பல நிறுவனங்களின் சந்தை மதிப்பு இந்த நிலையை விட அதிமாக இருக்கும். ஆனால் புதுயுக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மதிப்பை குறிப்பிடுவதுதான் யுனிகார்ன்.


தற்போது வரை இந்தியாவில் 52 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. இந்த பட்டியலில்  இடம்பெற்ற பிறகு சரிவை சந்தித்த சில நிறுவனங்களும் உள்ளன. உதாரணத்துக்கு ஹைக் செயலி பில்லியன் டாலர் சந்தை மதிப்பை தாண்டிய பிறகும் சரிவை சந்தித்தது. கடந்த ஆண்டு இந்த செயலி மூடப்பட்டது. இந்தியாவில் 2011-ம் ஆண்டு இன்மொபி என்னும் நிறுவனம் யுனிகார்ன் கிளப்-ல் முதன் முதலாக இணைந்தது.


யுனிகார்ன் பட்டியலில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சியை இந்தப் பகுதியில் பார்க்கலாம். அடுத்த வாரம் ஜொமோட்டோ நிறுவனத்தின் ஐபிஒ வெளியாக இருப்பதால் இந்த நிறுவனத்தின் வெற்றிக்கதையை நாம் பார்க்கலாம்.




 


ஆரம்ப காலம்


தீபேந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சத்தா ஆகிய நண்பர்கள் ஐஐடியில் படித்தவர்கள். 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை ஐஐடியில் டெல்லியில் படித்தார்கள். அதன் பிறகு இருவரும் பெயின் அண்ட் கம்பெனியில் ஆலோசகர்களாக இணைந்தார். இந்த சமயத்தில் ஸ்டார்ட் அப் அலை இந்தியாவில் தொடங்கியது. அப்போது FoodieBay  என்னும் தளத்தை தொடங்கினார்கள். இந்த தளம் டெல்லியில் உள்ள உணவகங்களின் மெனு கார்டை ஒருங்கிணைத்து கொடுக்கும்.  


இதனால் ஒரு உணவகத்துக்கு வரும்போதே அங்கு என்ன கிடைக்கும் என்பதில் வாடிக்கையாளர்கள் தெளிவாக இருந்தார்கள். இந்த தளத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள உணவகங்களையும் இணைத்தார்கள். மேலும் அடுத்தகட்டமாக சர்வதேச அளவில் செல்ல வேண்டும் என திட்டமிட்டனர். அதனால் நிறுவனத்தின் பெயரை 2010-ம் ஆண்டு ஜொமோட்டோ என்று மாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து பல வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் முதலீடு செய்யத் தொடங்கின, இன்ஃபோஎட்ஜ், செக்யோயா கேபிடல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் 2010 முதல் முதலீடு செய்தன. கடந்த பிப்ரவரியில் கூட இந்த நிறுவனம் நிதி திரட்டி இருந்தது. டைகர் குளோபல், ஆண்ட் பைனான்ஸியல், டெமாசெக், விஒய் கேபிடல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்தன.


இதுவரை இந்த நிறுவனம் 210 கோடி டாலர் அளவுக்கு முதலீட்டை பெற்றிருக்கிறது. 21 ரவுண்டுகளில் இந்த முதலீடு கிடைத்திருக்கிறது. மொத்தம் 25-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். ஆரம்ப காலங்களில் முதலீடு கிடைக்க தொடங்கியதும் இந்தியாவில் உள்ள இதர நகரங்களில் விரிவாக்கம் செய்தது மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விரிவாக்கம் செய்தனர். யுஏஇ. இலங்கை, கத்தார், இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், தென் ஆப்ரிக்கா, துருக்கி, பிரேசில், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த சேவை விரிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் சில நிறுவனங்களை வாங்கியது.


உணவு விநியோகம்


2015-ம் ஆண்டு நிறுவனத்துக்கும் மிகவும் சவாலான ஆண்டாக மாறியது. வருமானம் குறைந்ததால் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கியது. 2016-ம் ஆண்டு வெளிநாட்டு செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது. அதே சமயத்தில் நிறுவனம் தொடங்கும்போது இந்தியாவில் இணையம் மட்டுமே பிரபலமாக இருந்தது. ஆனால் நாளடைவில் செயலியும் பிரபலமானது. இதனை பயன்படுத்துக்கொண்டு உணவு 2015-ம் ஆண்டு  வினியோகத்தில் ஜோமோட்டோ இறங்கியது. இத்தனைக்கும் ஸ்விக்கி நிறுவனம்தான் உணவு விநியோகத்தை முதன் முதலில் 2014-ம் ஆண்டு கொண்டுவந்தது. இதனை அடுத்துதான் ஜொமோட்டொ கொண்டுவந்தது. ஆனால் மற்ற நிறுவனங்களை விட இந்த பிரிவில் நல்ல வளர்ச்சியை அடைந்தது.


உணவு விநியோகம் பார்பதற்கு நல்ல பிஸினஸ் வாய்ப்பாக இருந்தாலும் ஜொமோடோவுக்கு பிறகு வந்த பல நிறுவனங்கள் தோல்வியை சந்தித்தன. TinyOwl , ஃபுட் பாண்டா, உபெர் ஈட்ஸ்  (சில ஆண்டுகளுக்கு முன்பு ஜொமோட்டொ உபெர் ஈட்ஸ்-யை வாங்கியது) உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இது தவிர பல நிறுவனங்கள் இந்த பிரிவில் தொடங்கப்பட்டு மூடின. தற்போது இந்த பிரிவில் ஸ்விக்கி மற்றும் ஜொமோட்டோ ஆகிய நிறுவனங்கள் பெரும்பாலான சந்தையை வைத்திருக்கிறது. தற்போது 500க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் செயல்பாடு இருக்கிறது. தவிர 23 வெளிநாடுகளில் செயல்பட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு ஒரு நாளில் 30 லட்சம் ஆர்டர்கள் என்னும் மைல்கல்லை எட்டியது.


தற்போது மொத்தம் 1.1 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். சராசரியாக 31 லட்சம் ஆர்டர்கள் இந்த ஆப் மூலம் செய்யப்படுகிறது.




ஐபிஓ


இது ஐபிஓகளின் பொற்காலம் என்றே சொல்லலாம். இந்த ஆண்டு பல நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது. ஆனால் புதுயுக ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் முதல் ஐபிஓ ஜொமோட்டோதான். இந்த ஐபிஓவின் வெற்றியை பொறுத்தே இன்னும் பல நிறுவனங்களின் ஐபிஓ முடிவு இருக்கும்.


ஐபிஒவுக்கு பிறகு 9 பில்லியன் டாலர் (ரூ.64,365 கோடி) சந்தை மதிப்பு உடைய நிறுவனமாக மாறும் என கணிக்கப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை 14-ம் தேதி இதன் ஐபிஓ வெளியாகிறது. ஒரு பங்கின் விலையாக ரூ.72-76 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.


சில நாட்களுக்கு முன்பு குரோபர்ஸ் என் குரோசரி விற்பனை நிறுவனத்தில் 10 கோடி டாலர் அளவுக்கு  (9.3 சதவீத பங்குகள்) ஜொமோட்டோ முதலீடு செய்தது. இதன் மூலம் விரைவில் ஆன்லைன் குரோசரி விற்பனையும் ஜொமோட்டோ செயலி மூலமாகவே நடைபெறும் என தெரிகிறது. இந்த ஐபிஓ வெற்றி என்பது இந்த நிறுவனத்துக்கு மட்டுமல்ல, ஸ்டார்ட் அப் துறைக்கும் முக்கியமானது.