கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அளிக்கும் நிவாரணத்தொகைக்கு வருமான வரிசெலுத்த தேவையில்லை என்பது போன்ற பல்வேறு மாற்றங்களை மக்களின் வசதிக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
கொரோனா தொற்றின் 2 வது அலையின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நேரத்தில் சமானிய மக்களுக்கு உதவும் வகையில் வருமான வரிச் செலுத்துவதற்கான கால நீடிப்பு, வரி விலக்கு உள்ளிட்டவற்றில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைக்கொண்டு வந்துள்ளது. என்னென்ன மாற்றங்கள்? என்ன வகையில் மக்களுக்கு பயன்பெறுகிறது என தெரிந்து கொள்வோம்.
வருமான வரித்துறையின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு படிவம் 16 வழங்குவதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆம் தேததியிலிருந்து ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆவணங்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்க்குள் இணைக்கத் தவறினால் பான் கார்டு செயல்படாது எனவும் சரியான நேரத்தில் இணைக்கத் தவறும் பட்சத்தில் ரூ .1,000 வரை அபராதம் விதிக்க வேண்டியிருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றினைக் கருத்தில் கொண்டு விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின் கீழ், வட்டி இல்லாமல் பணம் செலுத்துவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கூடுதல் தொகையுடன் பணத்தினை செலுத்துவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்குத் தேவையான பணத்தினை தங்களது நிறுவனத்தின் முதலாளிகள் மற்றும் நண்பர்களிடமிருந்து பெறும் பட்சத்தில் அதற்கு வரிச் செலுத்த தேவையில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகைக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை எனவும், இதற்காக ரூ.10 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
புதிய வீடு வாங்குபவர்களுக்கான வரிவிலக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நிதியாண்டு 2020-21 ஆம் ஆண்டிற்கான படிவம் எண் 64 D யில் முதலீட்டு நிறுவனத்தால் அதன் பங்குதாரர்களுக்கு செலுத்தப்பட்ட அல்லது வரவு வைக்கப்பட்ட வருமான அறிக்கையை ஜூலை 15 அல்லது அதற்கு முன் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தொடர்பான குறைதீர் திட்டத்தின் கீழ், செலுத்தப்பட வேண்டிய தொகைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்ட மதிப்பீட்டு உத்தரவை( assessment orde) நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..
இதுப்போன்று கொரோனா காலக்கட்டத்தில் வருமான வரிச்செலுத்துவோரின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது வருமான வரிச்செலுத்துவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என கூறப்படுகிறது.