டெஸ்லா
பிரபல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் தங்களுடைய கார் விற்பனையை சிறப்பாக நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. விற்பனை ஒருபக்கம் இருந்தாலும், கார் தொழிற்சாலை இந்தியாவுக்கு வந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மாநில அரசுகள் விரும்புகின்றன. அதனால் எங்கள் மாநிலத்துக்கு வாருங்கள் என பல மாநிலங்கள் டெஸ்லாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. ஆனால் இது தொடர்பாக எலான் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதுமட்டுமின்றி, எலானின் ஸ்டார்லிங்க் இண்டர்நெட்டும் இந்தியாவுக்கு வருமா என காத்துக்கிடக்கின்றன இளைஞர்கள்.
ஸ்டார் நெட்..
பல்வேறு பிஸினஸில் கால்பதித்து வெற்றிபெற்ற எலான் இண்டர்நெட் உலகை ஆளும் திட்டத்தில் ஸ்டார்லிங்கை உருவாக்கினார். பூமியின் தாழ்வான பகுதியில் சிறிய சேட்டிலைட்ஸ் நிறுவப்பட்டு அதன்மூலம் இண்டர்நெட் கொடுக்கப்படும். இந்த சேவை தற்போது 30க்கும் அதிகமான நாட்டில் பயன்பாட்டில் உள்ளது. இது இந்தியாவுக்கு எப்போது வரும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் எலானிடம்கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த எலான், நாங்கள் அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல டெஸ்லா கார் தொழிற்சாலை இந்தியாவில் எப்போது அமைக்கப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இந்நிலையில் இந்தியாவைக் குறிப்பிடாமல் இதுதான் பொதுவான விதி என்பதுபோல எலான் மஸ்க் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில், டெஸ்லாவின் விற்பனை மற்றும் சர்வீஸுக்கு அனுமதி வழங்கப்படும் இடத்தில்தான் அதற்கான தொழிற்சாலையும் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசுடன் பேச்சுவார்த்தை..
முன்னதாக இந்தியாவில் டெஸ்லாவை கொண்டு வருவது குறித்து பேசிய எலான், “இந்தியாவில் எங்களுடைய கார்களை கொண்டு வர இன்னும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” எனக் கூறினார். டெஸ்லா நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு அதிக வரி விதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த கார்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு மட்டும் இந்திய வர உள்ளதாக தெரிகிறது. ஆகவே அதற்கான வரி மிகவும் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக அந்த காரின் விலையும் இந்தியாவில் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். எனவே இதை தவிர்க்க எலோன் மஸ்க் இந்திய அரசிடம் பேசி வருவதாக தெரிகிறது.
தமிழகத்தின் அழைப்பு..
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் அவருடைய டெஸ்லா நிறுவனம் முதலீடுகளை மேற்கொண்டு எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என வரவேற்பு விடுத்தார். இந்த ட்வீட் குறித்து எலான் மஸ்க் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் இன்னும் அளிக்கப்படாமல் உள்ளது.