தொழில்நுட்பத்துறையில் கோலோச்சும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் கிரெடிட் கார்ட் சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் விரும்பும் ஆப்பிள் சாதனங்கள்:
உலகளவில் தரமான தொழில்நுட்ப சாதனங்கள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது ஆப்பிள் நிறுவனம் தான். அந்நிறுவனத்தின் சாதனங்களில் வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் உயர்தொழில்நுட்ப அம்சங்கள் தான், பயனாளர்கள் ஆப்பிள் சாதனங்களை அதிகம் விரும்பி வாங்க முக்கிய காரணம்.
இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் இந்தியாவில், இரண்டு நேரடி சில்லறை விற்பனை நிலையங்களை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பங்கேற்றார். அந்த வருகையின் போது, பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆப்பிள் கிரெடிட் கார்ட்?
அந்த வகையில், எச்டிஎஃப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான சஷிதர் ஜெகதீஷனையும், டிம் குக் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, இந்தியாவில் "ஆப்பிள் கார்டு" என அழைக்கப்படும் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்த டிம் குக் வங்கிகள் மற்றும் அரசாங்க அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு ஆப்பிள் பே எனப்படும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சேவையை தொடங்குவதற்காக, இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
தீவிர ஆலோசனை:
நிதித்துறை சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் ஆப்பிள் நிறுவனம் விசாரித்து வருவதாக தெரிகிறது. அதன்படி, வங்கியுடன் சேர்ந்து கோ-பிராண்ட் பெயரில் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்வதற்கு என ஏற்கனவே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள் எனவும், ஆப்பிள் நிறுவனத்திற்கு என சிறப்பு சலுகை எதுவும் வழங்க முடியாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்து விட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் கிரெடிட் கார்ட் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் வழங்க ஆப்பிள் நிறுவனம் அனுமதி பெற்றால், அதன் வணிகம் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அந்நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, சாதனங்களுக்கான சலுகைகள் மற்றும் மாதத்தவணை அடிப்படையில் தொழில்நுட்ப சாதனங்களை விற்பனை செய்வது போன்றவற்றின் மூலமும், ஆப்பிள் நிறுவனம் தனது வியாபாரத்தை பெருக்கக் கூடும்.
அதிகரிக்கும் பணபரிமாற்றம் சேவை:
இந்தியாவில், கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்த வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மொபைல் போன்கள் மூலம் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் வேகமாக பணம் செலுத்த UPI அனுமதிக்கிறது. மொபைல் போன்கள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது
பெருநிறுவனங்களின் பெரும் திட்டம்:
இந்நிலையில் தான் ஆப்பிள், கூகுள், அமேசான் மற்றும் சாம்சங் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பணப்பரிவர்த்தனை சேவையை தீவிரமாக விரிவாக்கம் செய்து வருகின்றன. அதோடு இந்த துறையில் நீண்ட காலத்திற்கான திட்டங்களையும் கொண்டுள்ளன. அதனடிப்படையில் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணச் செயலிகளை உருவாக்கி, அதனை லாபநோக்கில் செயல்படுத்த திட்டமிடுகின்றன.