டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியாவை ரூ.18000 கோடிக்கு விற்றதாக மத்திய அரசு அறிவிப்பு. ரூ.70ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை டாடா குழுமம் வாங்கியுள்ளது. 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் தன்வசப்படுத்தியது டாடா.


முன்னதாக, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றி பெற்றதாக தகவல் வெளியானது.  ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே சென்றுள்ளது.


 






ஜேஆர்டி டாடாதான் விமான நிறுவனங்களை நிறுவி 1932இல் இந்திய விமான சேவையை துவக்கி முதல் விமானத்தை இயக்கினார். டாட்டா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.  


1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்த நிறுவனம். தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், இரண்டாவமு இடத்தைப் பிடித்தன. இந்த நிலையில் நிறுவனம் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்திலும். ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடனிலும் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை இந்திய ஒன்றிய அரசு எடுத்ததாக கூறப்பட்டது. அதன்படியே தற்போது ஏர் இந்தியா, டாடா கைக்கு மாறியுள்ளது.