சால்ட் முதல் சாஃப்ட்வேர் வரை விற்பனை செய்யும் டாடா குழுமம், சீனாவில் இருந்து வெளியேறும் ஆப்பிள் நிறுவனத்தின் வணிகத்தை கைப்பற்ற முயலும் பல முக்கிய இந்திய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஏற்கனவே டாடா குழுமத்திற்குச் சொந்தமான சில்லறை வர்த்தக நிறுவனமான இன்பினிட்டி ரீடெய்ல், க்ரோமா எனும் பெயரில் மின்சார சாதனங்களை விற்கும் தொடர் சங்கிலி கடைகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.


புதியதாக 100 கடைகளை திறக்க திட்டம்?


 இந்நிலையில்,  நாடு முழுவதும் மேலும் 100 சிறப்பு க்ரோமா கடைகளை திறந்து, அதில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்சார சாதனங்களை மட்டும் விற்பனை செய்ய டாடா குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வணிக வளாகங்கள், அதிக வணிகம் நடைபெறும் பகுதிகள் போன்ற இடங்களில், புதிய கடைகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுதொடர்பான அறிக்கையின்படி, டாடா குழுமம் ஓசூரில் உள்ள தனது எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஐபோன் உதிரிபாகங்களை உருவாக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை பெருக்க திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் உடனான வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பல்லாயிரக்கணக்கான புதிய ஊழியர்களை டாடா குழுமம் சேர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஓசூரில் உள்ள டாடா குழுமத்தின் ஆலையில் ஐபோன் கேஸ்களை உற்பத்தி செய்யும் பணியில் சுமார் 10,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர். 


ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்:


புதிய ஒப்பந்தத்தின் மூலம், இன்பினிட்டி ரீடெய்ல் ஆப்பிளின் உரிமையாளர் பங்குதாரராக மாறும் என கூறப்படுகிறது.  இந்த 100 சிறிய பிரத்யேக கடைகள் ஒவ்வொன்றும் 500-600 சதுர அடியில் இருக்கும் என்றும்,  ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளராக டாடா குழுமம் மாறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆப்பிள் பிரீமியம் மறுவிற்பனையாளர் கடைகளில் இருந்து,  க்ரோமா கடைகள் வேறுபட்டதாகவும் சிறியதாகவும் இருக்கும். இந்த சிறிய 100 பிரத்தியேக கடைகள் பெரும்பாலும் ஐபாட், ஐபோன் மற்றும் கைக்கடிகாரங்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்த உள்ளது. அதன் பெரிய கடைகள் மேக்புக்குகள் மற்றும் முழு ஆப்பிள் மாடல்களையும் விற்பனை செய்யும் எனக் கூறப்படுகிறது.


டாடா குழுமத்தின் அடுத்த திட்டம்:


இந்தியாவில் தற்போது சுமார் 160 ஆப்பிள் பிரீமியம் மறுவிற்பனையாளர் கடைகள் உள்ள சூழலில், ஆப்பிளின் முதல் நிறுவனத்திற்கு சொந்தமான பிளாஃக்ஷிப் ஸ்டோர் விரைவில் மும்பையில் திறக்கப்பட உள்ள நேரத்தில்,  ஆப்பிள் மற்றும் டாடா குழுமம் இடையேயான ஒப்பந்தம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த நடவடிக்கையின் மூலம், புதிய கூட்டணிகள் மற்றும் வணிகங்களில் ஈடுபடுவதற்கான முயற்சியில் டாடா குழுமம்  புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், ஏர் இந்தியாவை விஸ்தாராவுடன் இணைப்பதாக அறிவித்த பிறகு, 500 புதிய விமானங்களை வாங்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை உலக வணிக வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்யும்  வகையில்,  செமி-கண்டக்டர் சில்லுகள் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கவும் டாடா குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . பெரும் வணிபத்தை தொடர்ந்து சில்லறை விற்பனையிலும், டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்துடன் டாடா குழுமம் செய்ய உள்ளதாக கூறப்படும், இந்த புதிய ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.