நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை பல்வேறு வகையில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதில் ஒரு சுவாரசியமான பிறந்தநாள் கொண்டாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


ஆம், ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, திருப்பரங்குன்றம் ரஜினி ரசிகர்கள் 73 கிலோ அளவிலான கேக்கை தயார் செய்து வெட்டி, கோலாகலமாக ரஜினிகாந்தின்  பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


ஒவ்வொரு வருடமும் அன்னதானம், சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், கேக் வெட்டுதல், ஏழை எளியோருக்கு உதவுதல் என பல்வேறு வகையில் ரசிகர்கள் ரஜினிகாந்தின் பிறந்த நாளை கொண்டாடி வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இந்த 73 கிலோ பிறந்தநாள் கேக் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.









ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 10 அன்று அவரது பாபா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனது. 2002ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பாபா.அந்நாட்களில் அந்த திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை. தற்போது பாபா திரைப்படம் ரீ ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்தின் புக்கிங் வேற லெவல் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாபா திரைப்படத்திற்கான வரவேற்பு வானளவு உயர்ந்துள்ளது. 






நேற்று இரவு ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பாபா திரைப்படத்தை சென்னை வெற்றி திரையரங்கில் பார்த்துள்ளார். அப்போது 20 கிலோ எடையுள்ள பிறந்தநாள் கேக் வெட்டி ரஜினிகாந்தின் பிறந்த நாளை திரைப்பட உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளார். அதில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமியும் கலந்து கொண்டார். 






திரைப்பட உரிமையாளர் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு தி பெஸ்ட் எவர் தலைவர் பர்த்டே என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் தற்போது ஊரில் இல்லாத காரணத்தினால் அவரது மனைவி மட்டும் நேற்றிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.