TCS Explanation : இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ் - TCS) அலுவலகத்திற்கு வராத ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை அனுப்பியதாக செய்திகள் வெளியானது. அதில், மாதத்தில் 12 நாள் அலுவலகத்திற்கு வராத ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிர்வாகம் மெமோ அனுப்பியதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்திருந்தது.
இதை தற்போது டாடா கன்சல்டன்சி நிர்வாகம் முழுமையாக மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ”டிசிஎஸ் நிர்வாகம் வாரத்திற்கு 3 நாட்கள் அலுவலகத்திற்கு ஊழியர்களை வர சொல்லி ஊக்குவித்து வருகிறது. வராத ஊழியர்களுக்கு அவர்களின் தொழில் மற்றும் சம்பளத்தில் பாதிப்பு ஏற்படும் என ஒருபோதும் சொல்லவில்லை.
கடந்த சில மாதங்களாகவே அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஊழியர்கள் மீண்டும் அலுவலத்திற்கு வரும் கலாச்சாரம் துவங்கியுள்ளது. அதேபோல், கடந்த 2 ஆண்டுகளில் கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். அவர்கள் அலுவலத்துக்கு வருவதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ளவும், வளர்ச்சி பெறவும் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
அலுவலகம் வரும் கலாச்சாரம் மூலம் ஊழியர்களிடையே வலுவான உணர்வை வளர்த்து, சிறந்த ஒருங்கிணைப்பில் டிசிஎஸ் நிறுவனம் செயல்படுகிறது” என்று தெரிவித்தார்.
Work From Home:
கொரோனா நோய் தொற்று அபாயத்தை குறைப்பதற்காக லாக்டவுன்கள் போடப்பட்டு, அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து, அனைத்து அலுவலகங்களிலும் பணியுரியும் ஊழியர்கள், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது, அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியநிலையில், ஐடி நிறுவனங்கள் வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என அறிவித்தது.
பரவிய செய்தி:
டிசிஎஸ் நிறுவனம் அனுப்பியதாக கூறப்படும் மெமோவில், "மாதத்தில் குறைந்தபட்சம் 12 நாட்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் பரவின
மேலும், ”ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டுமென்றும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும். இந்த அறிவிப்பு முதற்கட்ட எச்சரிக்கை என்றும் கூறப்பட்டதாகவும்” தகவல் வெளியானது.
மார்ச் 31 நிலவரப்படி, டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் மொத்தம் 592,195 பேர் பணியமர்த்தப்பட்டதாகவும், அதில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது