தமிழ்நாடு முழுவதும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற வணிக நிறுவனங்கள், கடைகள் செயல்பட்டு வருகிறது. தவிர பதிவு பெறாத சிறு கடைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவன கட்டிடங்களின் வாடகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது. இந்த வரி உயர்வால் பதிவு பெற்ற சிறிய வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் கடும் பாதிக்கப்படுவார்கள். எனவே வாடகை மீதான 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். வணிக நிறுவனங்கள் மீது சொத்து வரி பல மடங்கு உயர்வினை எதிர்த்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.



அதன்படி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பின்புறம் உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் வகையில், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மொபைல் போன் விற்பனையாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு பழைய பிளாஸ்டிக் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.



இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் பெரியசாமி கூறுகையில், மத்திய அரசு விதித்துள்ள 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். இந்த ஜிஎஸ்டி வரியால் பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே வாடகை மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆறு சதவீதம் கூடுதல் சொத்து வரியை திரும்ப பெற வேண்டும். சேலம் மாநகராட்சி சொத்து வரி, குப்பை வரி என்று பல மடங்கு அதிகரித்துள்ளது. உயர்த்தப்பட்ட சொத்து வரி, குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக, மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு சொத்து வரி ஆயிரம் ரூபாய் இருந்த நிலையில் தற்போது இருபதாயிரம் ரூபாய் வரை செலுத்தப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் சொத்து வரி செலுத்தவில்லை என்றால் வீட்டிற்கு வந்து தகராறு செய்கின்றனர். தற்போது வரி விதிப்பது மட்டுமில்லாமல், பழைய வரி செலுத்தவில்லை என கூறி அதற்கும் தனியாக வரிவசூல் செய்கின்றனர். உரிய நேரத்தில் வரி வசூலிக்காமல் திடீரென வரி வசூல் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனிடம் இது பற்றி கூறியிருந்தோம், அவர் எங்களது கோரிக்கையை விரைவில் சரி செய்வதாக கூறியிருந்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முன்னெடுக்கும் என எச்சரித்தார்.