TAMCO Loan Details in Tamil: தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு, டாம்கோ மூலம் அதிகபட்சமாக 30 லட்ச ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
சிறுபான்மையின மக்களுக்கான கடனுதவி:
தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TAMCO Loan Scheme) மூலம், சிறுபான்மை மக்களின் மேம்பாட்டிற்காக கடனுதவி வழங்கி வருகிறது. அதன்படி, தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் மற்றும் கல்விக்கடன் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம். மேற்குறிப்பிடப்பட்ட 4 வகையான திட்டங்களின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கும் நபர்களின், குடும்ப வருமானம், திட்ட அறிக்கை மற்றும் ஆண், பெண் உள்ளிட்டவற்றை பொறுத்து கடன் தொகை குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் சமூக மக்கள் இந்த கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்:
கடனுதவி பெற வ்ரும்புவோர் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன்பெறும் தொழில் குறித்த விவரம் அல்லது திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் வழங்க வேண்டும்.
எங்கு விண்ணப்பிக்கலாம்?
திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயன் அடையலாம்.
கடனுதவி விவரங்கள்:
விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோர் அடிப்படையில் அவருக்கு ஒதுக்கப்படும் கடனின் அளவு இருக்கும். சிபில் ஸ்கோர் நன்றாக உள்ளது என்கிற பட்சத்தில்,
தனிநபர் கடன்:
- திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடனாக ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.20,00,000 பெறலாம்.
- திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 வரை கடன் வழங்குகிறது.
சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன்:
- சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
- திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- வரை கடன் வழங்கப்படும்
கைவினை கலைஞர்களுக்கான கடன்:
- கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- வரை கடன் வழங்கப்படும்.
கல்விக் கடன் திட்டம்:
- சிறுபான்மையின் மாணவ/மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரை கடன் பெறலாம். இதற்கு 3 சதவிகித வட்டி வசூலிக்கப்படும்
- திட்டம் 2 -ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலான கல்வி கடனுதவி தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள கடனுதவிகளை பெற, பயனாளர்கள் குறிப்பிட்ட வருமான வரம்புக்குள் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். திட்டம் தொடர்பான முழு தகவலை அறிய, அந்தந்த மாவட்ட சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தை அணுகவும்