உலக அளவில் பங்குச் சந்தை ஊழல், போலியான பரிவர்த்தனை மற்றும் பெரிய நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக செய்திகளையும் தவல்களையும் வெளியிடும் ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவனத்தின் அதிரடி தகவலொன்றால் , இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்களின் பங்குகள் மற்றும் வங்கிகளின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
சரிந்த பங்குச்சந்தை:
இதையடுத்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண், இன்று காலையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிந்து 59,206 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்ஃடி-யும் இன்று காலை 320 புள்ளிகள் சரிந்து 17,572 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தகத்தில், அதானி குழுமம், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் பிபிசிஎல் உள்ளிட்டவை அதிக இழப்பை சந்தித்தன. ஆனால், வர்த்தகம் முடிவடையும் நேரத்தில், ஓரளவு பங்குச் சந்தை வர்த்தகம் மீண்டது.
பெரிய நிறுவனங்களின் தாக்கம்:-
ஹிண்டன்பர்க் அமைப்பின் குற்றச்சாட்டு காரணமாக, அதானி குழும பங்குகள் கிட்டத்தட்ட 20 சதவீதம், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் 1 முதல் 3 சதவீதம் வரை இறங்கு முகத்தில் வர்த்தகமாயின.
பெரிய நிறுவனங்கள் வீழ்ச்சி மற்றும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் பங்கு சந்தைகள் பெரிதும் சரிவை சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குழப்பத்தில் முதலீட்டாளர்கள்:
பங்கு சந்தைகள் பெரும் சரிவை கண்டு வருவதையடுத்தும், அடுத்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையிலும் , முதலீட்டாளர்கள் பெரிதும் குழப்பத்தில் உள்ளனர்.