உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களை போல் ஸ்மார்ட் வாட்ச்களின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மட்டுமல்லாமல் பல வயதானவர்களும் இந்த ஸ்மார்ட்வாட்சை அதிகமாக பயன்படுத்த தொடங்கி வருகின்றனர். இதன்காரணமாக ஸ்மார்ட்வாட்ச் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. 


இந்நிலையில் உலகளவில் ஸ்மார்ட்வாட்ச் விற்பனையில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது முடிந்த இரண்டாவது பொருளாதார காலாண்டில் உலகளவில் ஸ்மார்ட்வாட்ச் விற்பனை கடந்த ஆண்டைவிட 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கவுண்டர்பாயிண்ட் என்ற ஆய்வு நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. 


அதன்படி இந்தியாவில் இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் ஸ்மார்ட்வாட்ச் விற்பனை சுமார் 300 சதவிகிதம் உயர்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் பிராண்ட் ஸ்மார்ட்வாட்ச்களின் வருகையும் ஒரு முக்கிய காரணமாக ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது ஆப்பிள், சாம்சங், ஹூவாய் போன்ற பிராண்ட்களுடன் இந்தியாவில் ஃபையர் போல்ட், நாயிஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்வாட்ச்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. 




மேலும் படிக்க:அட.. இது சூப்பர்.. எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப செய்தி.. வங்கி அளித்த அறிவிப்பு..




இந்திய அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சாம்சங் மற்றும் ஹூவாய் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சியின் மூலம் உலகளவில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. 


ஏனென்றால் சீனாவில் இரண்டாவது காலாண்டில் ஸ்மார்ட்வாட்ச்களின் விற்பனை சுமார் 10 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அங்கு நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொரோனா பெருந்தொற்று இதற்கு முக்கிய காரணமாக அறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல் மூன்றாவது இடத்தில் இருந்த ஐரோப்பா ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை கூறியுள்ளது. இந்தப் போர் காரணமாக ஐரோப்பாவில் ஸ்மார்ட்வாட்ச் விற்பனை கடந்த ஆண்டைவிட 13% குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 


 




உலகளவில் ஸ்மார்ட்வாட்ச் விற்பனையில் வட அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகித்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகளில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் விற்பனை 8% சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்திய அளவில் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் விற்பனையில் முதலிடத்தில் இருந்தாலும் ஃபையர் போல்ட் மற்றும் நாயிஸ் வாட்ச்கள் விற்பனை விகிதம் பெருமளவில் அதிகரித்துள்ளது. 


உதாரணமாக நாயிஸ் ஸ்மார்ட்வாட்ச் விற்பனை சுமார் 298% அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த பிராண்ட் ஸ்மார்ட்வாட்ச்கள் இணையதள மற்றும் கடை விற்பனை ஆகிய இரண்டும் அதிகளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது தெரியவந்துள்ளது. 




மேலும் படிக்க:திருடர்களால் திருட முடியாத தங்கநகைப் பத்திரம், வட்டியுடன் பாதுகாப்பு வழங்கும் வங்கிகள்.. இதை தெரிஞ்சுகோங்க..