சிவகங்கை மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 10 நபர்களைக் கொண்ட குழுவிற்கு, நவீன சலவையகங்கள் அமைத்திட தகுதிகளின் அடிப்படையில் ரூ.3.00 லட்சம்  மதிப்பீட்டிலான மானியத்தொகை வழங்கப்படவுள்ளது.   


தமிழக அரசு நிதியுதவியுடன் கூடிய புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது

 

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில், நவீன சலவையகங்கள் அமைக்க தமிழக அரசு நிதியுதவியுடன் கூடிய புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான  நிதியில் ரூ.3.00 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

 

விண்ணப்பிக்க 10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும்

 

இத்திட்டத்தின் கீழ்  விண்ணப்பிக்க 10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.00 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

 

பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்

 

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises)  துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, குறிப்பிட்டுள்ள  திட்டத்தின் கீழ்  பயன்பெற விருப்பமும், தகுதியும் உள்ள குழுவினர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்” - என சிவகங்கைமாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.