தங்கத்தின் விலை ஒருபுறம் வரலாற்று உச்சங்களை தொட்டு வரும் நிலையில், வெள்ளியின் விலையும் அதனுடன் போட்டி போட்டு உயர்ந்து வருவது, பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் பார் வெள்ளியின் விலையே ஆயிரங்களில் தான் இருந்துள்ளது. ஆனால், தற்போது அது லட்சங்களாக மாறி அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிலையில், வெள்ளியின் விலை மேலும் உயரும் என்றே கூறப்படுவது, மேலும் கவலையை அளிக்கிறது.
கடந்த வாரத்தில் வரலாற்று உச்சம் தொட்ட வெள்ளி விலை
வெள்ளியின் விலை கடந்த வார இறுதியில் 285 ரூபாய் என்ற வரலாற்று உச்ச விலையை தொட்டது. கடந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 22-ம் தேதி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 231 ரூபாயாக இருந்தது. பின்னர், 23-ம் தேதி விலை உயர்ந்து, 234 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தொடர்ந்து, 24-ம் தேதி கிராமிற்கு அதிரடியாக 10 ரூபாய் உயர்ந்து, 244 ரூபாய் என்ற உச்சத்தை அடைந்தது. 25-ம் தேதி ஒரு ரூபாய் மட்டும் உயர்ந்து, கிராம் 245 ரூபாய்க்கு சென்றது.
இந்நிலையில், 26-ம் தேதி அதிரடியாக 9 ரூபாய் உயர்ந்து, கிராம் புதிய உச்சமாக 254 ரூபாய்க்கு சென்றது. இந்நிலையில், சனிக்கிழமையான 27-ம் தேதி, அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிராமிற்கு 31 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 285 ரூபாய்க்கு எகிறிது.
28-ம் தேதியான நேற்று அதே விலையில் நீடித்த வெள்ளி, இன்று, டிசம்பர் 29-ம் தேதி ஆறுதல் அளிக்கும் விதமாக 4 ரூபாய் விலை குறைந்து, கிராம் 281 ரூபாயாக விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
ஆயிரங்களில் தொடங்கி லட்சங்களை அடைந்த வெள்ளி விலை
வெள்ளியின் விலை கடந்த காலங்களில் சில ஆயிரங்களில் இருந்த நிலையில், தற்போது லட்சத்தை தொட்டுள்ளது. 1974-ம் ஆண்டு ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1,122 ரூபாயாக இருந்துள்ளது. பின்னர், 2000-மாவது ஆண்டில், அது 7,900 ரூபாயாக இருந்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2010-ம் ஆண்டில், பார் வெள்ளியின் விலை 27,255 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. பின்னர், அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2015-ம் ஆண்டில் 10,000 ரூபாய் வரை விலை உயர்ந்து, 37,825 ரூபாய் என்ற அளவில் இருந்துள்ளது.
அதற்கு அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2020-ம் ஆண்டில், 63,435 ரூபாய் என்ற அளவை வெள்ளி விலை எட்டியுள்ளது. தொடர்ந்து, 2021-ம் ஆண்டில், சற்று குறைந்து 62,572 ரூபாய் என்ற அளவில் இருந்துள்ளது.
ஆனால், 2022-ம் ஆண்டு விலை வெகுவாகக் குறைந்து, பார் வெள்ளியின் விலை 55,100 என்ற அளவில் இருந்த விலையில், அதற்கு அடுத்த 3 ஆண்டுகளில், அதாவது இந்த 2025-ம் வருடத்தின் ஜனவரி மாதத்தில், 90,500 என்ற விலைக்கு எகிறியது.
தொடர்ந்து அடுத்த 6 மாதங்களில், அதாவது ஜூன் மாதத்தில் 1 லட்சம் ரூபாயை கடந்து, 1,16,000 ரூபாய் என்ற உச்சத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து, தற்போது, ஆண்டு முடியும் தருவாயில், அதாவது 6 மாதங்களில், பார் வெள்ளியின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் உயர்ந்து, 2,85,000 என்ற வரலாற்று உச்ச விலையை அடைந்துள்ளது.
மேலும் உயருமா.?
இப்படிப்பட்ட சூழலில், தங்கம் மட்டுமல்லாமல், வெள்ளியின் விலை வரும் நாட்களில் உயரவே வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச பொருளாதார மந்தநிலை, அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு, வெள்ளியின் மீது முதலீடு அதிகரித்துள்ளதால், தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால், வரும் மார்ச் மாதத்தில், வெள்ளியின் விலை கிராம் 500 ரூபாய் வரை எட்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல், தங்கத்தின் விலையும் கிராமிற்கு 15,000 ரூபாய் வரை செல்லும் என்றும் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாகியுள்ளனர்.