பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் பெண்கள் ஓவர் டைம் பார்க்கும் நேரம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக வாரத்திற்கு 48 மணி நேரம் பெண்கள் ஓவர் டைம் செய்கின்றனர். இது கடந்த 2019ஆம் அண்டுடன் ஒப்பிடுகையில் 33.6 சதவீதம் அதிகம். தொழிலாளர் வாரியம் வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.


1948 தொழிற்சாலைகள் சட்டத்தின் படி 2008 ஆம் ஆண்டில் 39.2 சதவீதம் பெண் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் நேரம் உழைத்தனர்.


தொழிற்சாலைகள் சட்டத்தின் படி அனைத்து பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளுமே வருடாந்திர அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். அதில் ஊழியர்களின் பணி நேரம், விடுப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டும். தொழிற்சாலை சட்டத்தின் பிரிவு 51ன் படி ஒரு பணியாளர் வாரத்தில் 48 மணி நேரத்திற்கும் மேல் பணி செய்யக் கூடாது.


அண்மையில் கர்நாடகாவில் 12 மணி நேரம் வேலை சட்டம் அமல்படுத்தப்பட்டது. வாரத்திற்கான பணி நேரம் 48 மணி நேரம் தான் என்றாலும் ஒரு நாளில் 12 மணி நேரம் என அதை 4 நாட்களில் முடிக்கும்படி திருத்தம் செய்யப்பட்டது.


இந்நிலையில் 58.5 சதவீதம் பெண்கள் வாரத்திற்கு 45 முதல் 48 மணி நேரமும் ஆண்கள் 64.6 சதவீதம் பேர் இவ்வாறாக வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது. 


தமிழ்நாட்டில் அதிகம்..
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் அதிகமான பெண்கள் ஓவர்டைம் செய்கின்றனர். அடுத்தபடியாக ஆந்திர பிரதேசத்திலும், மூன்றாவதாக கேரளாவிலும் பெண் தொழிலாளர்கள் அதிகமாக ஓவர்டைம் செய்கின்றனர்.


இது தொடர்பாக ஆல் இந்தியா டிரேட் யூனியன் காங்கிரஸ் கூறுகையில், இது போன்று பெண்கள் அதிகப்படியாக ஓவர் டைம் பார்க்கும் சூழல் அதிகரிக்கக் காரணம் ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகளான பேப்பர் தொழிற்சாலைகள், காலணி, ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக சட்டத்தில் மாநில அரசுகள் சில தளர்வுகளைக் கொண்டு வருகிறது. ஆனால் அவை தொழிலாளர்களின் உரிமையை அத்துமீறுவதாகிவிடுகிறது. இது பணிச் சூழலில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, ஊழியர்களின் செயல்திறன், அவர்களின் ஊதியம் மற்றும் குறிப்பாக பெண்களின் செயல்திறனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த அறிக்கையில் ஒட்டுமொத்தமாக பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது 2.56 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019 தொடக்கத்தில் 2.28,837 ஆக இருந்த தொழிற்சாலைகளில் முடிவில் 2.34,696 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 30 சதவீதம் தொழிற்சாலைகள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தொழிற்சாலைகளில் ஆண்களின் எண்ணிக்கை 77.7 சதவீதமாகவும், பெண்களின் எண்ணிக்கை 22.2 சதவீதமாகவும் உள்ளது.