Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றுடன் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.


மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ்  224.4 அல்லது 0.4% புள்ளிகள் சரிந்து  59,502.7 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி  50 அல்லது 0.4% புள்ளிகள் சரிந்து 17,596.2 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.


இந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்துள்ளன. ஐ.டி. நிறுவன பங்குகள் சரிவுடனும், உலோகங்களின் பங்குகள் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகின.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


பி.எல்.ஏ.எல்., டெக்ஸ்மோ பைப்ஸ், மிர்சா இன்டர்நேசனல், மனுகிராப் இந்தியா, அப்பல்லோ சிந்தூரி, படேல் இஞ்சினியரிங், மங்கலம் வேல்ட், பிரிசன் ஜான்சம், ஆர்பிட் எக்ஸ்போர்ட், திருபதி ஃப்ராஜ், நிர்மான் அக்ரி,கமத் ஹோட்டல், ரூபா கம்பேனி உள்ளிட்ட நிச்.சி.எல்.உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட், சி.எஸ்.பி. வங்கி, ஆர்.பி.எல். வங்கி, நிப்பான், ஹோம் ஃபர்ஸ்ட், மாரிகோ, இன்ஃபோ எட்ஜ், ஹெச்.சி.எல்., இந்தஸ்லேண்ட் வங்கி,இன்ஃபோசிஸ், ஆயில் இந்தியா, பிரிலா கார்ப்ரேசன், டாடா பவர், விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்.பி.ஐ. கார்ட், அதானி டிரான்ஸ், கனரா வங்கி, அசோக் லேலேண்ட், கரூர் வைசியா வங்கி  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.  


கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம்:


அந்த விதத்தில், பங்கு சந்தையில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் தற்போது மெல்ல மெல்ல தெரிய வருகிறது. பங்கு சந்தையில் மின்னணு வடிவத்தில் பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்ய டிமேட் கணக்குகளே அதிகம் பயன்படுகிறது. எனவே, பங்கு சந்தை தரகர்கள் ஒவ்வொரு மாதமும் புதிய டிமேட் கணக்குகளைத் திறந்து வருகின்றனர். 


ஆனால், அதே நேரத்தில், பங்கு சந்தையில் பல மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் பழைய வாடிக்கையாளர்கள், பங்கு சந்தையில் தொடர முடியாமல் சவால்களை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக, கடந்த 9 மாதங்களில் பங்கு சந்தையில் இருந்து 53 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என தேசிய பங்கு சந்தையின் தரவுகள் வழியாக தெரிய வந்துள்ளது.




 



தொடர்ந்து 9ஆவது மாதமாக, தேசிய பங்கு சந்தையின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தேசிய பங்கு சந்தையில் 3.8 கோடி முதலீட்டாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 53 லட்சம் பேர் வெளியேறி உள்ளதால் அந்த எண்ணிக்கை 3.27 கோடியாக குறைந்துள்ளது.


இதை தவிர்த்து, பங்கு சந்தையில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கு மூன்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில், பங்கு சந்தையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால், தற்போது, பங்கு சந்தையில் மக்கள் வர்த்தகம் செய்வது ஒப்பிட்டளவில் குறைந்துள்ளது.


அறிகுறிகள்:


கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு நிதியாண்டில், சில்லறை விற்பனை 49,200 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. 2021-22 நிதியாண்டில், சில்லறை விற்பனை 1.65 லட்சம் கோடி ரூபாயாகவும் 2020-21 நிதியாண்டில் 68,400 கோடி ரூபாயாகவும் இருந்தது.


மார்ச் 2023இல் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் தினசரி சராசரி வருவாய் 29% குறைந்து ரூ.23,700 கோடியாக பதிவானது.


கடைசியாக, புதிய டிமேட் கணக்குகள் பதிவு செய்யப்படும்  வேகம் குறைந்து வருகிறது. சேர்க்கப்பட்ட புதிய கணக்குகளின் எண்ணிக்கை, மாதந்தோறும் 8% குறைந்து 19 லட்சமாக உள்ளது.


இதற்கு எல்லாம் முக்கிய காரணம், கொரோனா பெருந்தொற்று என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், வீட்டில் இருந்து பணிபுரியும் முறை அதிகம் கடைபிடிக்கப்பட்டதால் இளைஞர்களுக்கு பங்கு சந்தை கவர்ச்சிகரமாக தென்பட்டதாகவும் ஆனால், தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் போக்கு குறைந்து வருவதால் பங்கு சந்தை மீது இளைஞர்களின் ஆர்வம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.