தொடர்ந்து 3வது நாளாக சென்செக்ஸ் புள்ளிகள் இன்றும் வீழ்ச்சியுடனே தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த ஜூன் பத்தாம் தேதி வெள்ளியன்று சென்செக்ஸ் 1017 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 54,303 புள்ளிகளில் முடிவடைந்தது. நிஃப்டி 276 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,202 புள்ளிகளில் முடிவடைந்தன. கோடக் மகேந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெடிஎஃப்சி,ரிலையன்ஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன. 


வாரத்தின் முதல் நாளான நேற்று 1456.74 புள்ளிகள் அதாவது 2.68 சதவீத பங்குகள் வீழ்ச்சியடைந்து 52,846 புள்ளியில் முடிவடைந்தது. நிஃப்டியானது 427.40 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 15,774.40 புள்ளியில் முடிவடைந்தது. 650 பங்குகளில் முன்னேற்றமும், 2759 பங்குகள் சரிவையும் சந்தித்தன. 117 பங்குகளில் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. வங்கி, வாகனம், ஐடி, உலோகம், ஆயில் ஆகியவைகள் கடும் சரிவை சந்தித்தன. குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்டிஎப்சி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. இதனால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவிற்கு 78.29 ரூபாயாக வீழ்ச்சியைடந்தது.




இன்றும் சரிவுடனே தேசிய பங்குச்சந்தை தொடங்கியது. 374.72 புள்ளிகள் சரிந்து 52,471.98 புள்ளிகளிலும், நிஃப்டி 100.15 புள்ளிகள் சரிவடைந்து 15,674 புள்ளிகளிலும் வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருக்கிறது. இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தின் போது ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மகேந்திரா, இண்டஸ் இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, டைட்டன் ஆகியவை சரிவை சந்தித்தன. அதே நேரத்தில் ஏர்டெல், பவர் க்ரிட், எண்டிபிசி, எம் அண்ட் எம் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் கண்டன. இந்தியா மட்டுமல்லாமல் சியோல், டோக்கியோ, ஹாங்காங் மற்றும் ஷாங்காய் ஆகிய பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்திருக்கின்றன.


இந்த தொடர் சரிவுக்கு காரணங்களாக அமெரிக்காவின் பணவீக்கம், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் உயரும் என்ற அச்சம், நிலையற்ற கச்சா எண்ணெய் விலை, இந்திய பணவீக்க, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வீழ்ச்சி ஆகியவை பொருளாதார நிபுணர்களால் கூறப்படுகின்றன.




அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவின் மத்திய வங்கி ஜூன் 15ம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்திற்குப் பிறகு வட்டிவிகிதத்தை கடுமையாக உயர்த்தும் என்ற பயம் நிலவுகிறது. அதேபோல, கச்சா எண்ணெய் விலையிலும்  தொடர்ந்து சரிவு ஏற்பட்டுவருகிறது. தொடந்து 3வது நாளாக கச்சா எண்ணெயின் விலை சரிந்து 120 டாலருக்கு விற்பனையாகிறது. இதுவும் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பணவீக்கமும் இதில் தாக்கத்தை எற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் சந்தை எப்போது நிலை பெறுமோ அப்போது தான் இந்திய சந்தையும் நிலைபெறும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.