மும்பை, தேசியப் பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் உற்சாகமாக ஏற்றத்துடன் துவங்கிய நிலையில், பிற்பகலுக்குப் பின் சென்செக்ஸ் 304 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு சரிவுடன் முடிந்தது. சர்வதேச காரணிகள் அனைத்தும் சாதகமாக இருந்ததால், இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் காலையில் ஏற்றத்துடன் காணப்பட்டது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் அடுத்த கட்டமாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்து நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பங்குச்சந்தையில் இருந்து கடந்தசில வாரங்களாக முதலீட்டை எடுத்துவந்த அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று மட்டும் ரூ.384 கோடி முதலீடு செய்தது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்தியாவில் பணவீக்கம் கவலைப்படும் அளவுக்கு மோசமாக ஆகாது, பொருளாதார வளர்ச்சிக்கு குறைவு பற்றி அச்சப்படத்தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசியதும் முதலீட்டாளர்களுக்கு ஓரளவுக்கு உற்சாகத்தை அளித்து இருந்தது



இதனால் மும்பைப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கவும், கைமாற்றவும் செய்தனர். ஆனால், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை கடுமையாக உயர்த்தும் என்ற அச்சம், பெட்ரோல், டீசல்விலை தொடரந்து 2-வதுநாளாக உயர்ந்தது, பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு போன்ற காரணங்கள் முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தின. இதனால் காலையில் நன்றாகச் சென்று கொண்டிருந்த வர்த்தகம் பிற்பகலுக்குப்பின் மீண்டும் சரிவை நோக்கி பயணித்தது. ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் இல்லம், அலுவலகங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடந்த தகவல் வெளியானதால், ஹீரோ மோட்டார்ஸ் பங்குகள் மதிப்பு 4% சரிந்தது. இதனால் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்து, 57,684 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 91 புள்ளிகள் வீழ்ந்து 17,223 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.



நிப்டியில் பங்குகளில் உலோகத்துறை பங்குகள் 1.67% லாபத்தை ஈட்டின. அதைத் தொடர்ந்து, மருந்துத்துறை, எரிசக்தி துறை பங்குகள் லாபமடைந்தன. மும்பை பங்குசந்தையில், உலோகத்துறை பங்குகள் 1.99% லாபம் ஈட்டின. அதைத்தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயு, சுகாதாரத்துறை, எரிசக்திதுறை பங்குகள் நன்கு லாபத்துடன் கைமாறின. மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 18 பங்குகள் சரிவில் முடிந்தன.  டாடா ஸ்டீல், ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நல்ல லாபத்தை ஈட்டின. ஹெட்சிஎப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், கோடக் வங்கி, மகிந்திராஅன்ட் மகிந்திரா, மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன. ஒட்டுமொத்தமாக முதலீட்டாளர்கள் முதலீட்டை குறைத்ததால் பிற்பகல் பங்குச்சந்தை சரிவில் முடிவடைந்தது.