வாரத்தின் இரண்டாவது வா்த்தக நாளான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை தடுமாற்றத்திற்கு இடையே சரிவுடனே முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 153 புள்ளிகள் சரிந்தது. கடந்த 10 மாதங்களில் இல்லாதஅளவில் சென்செக்ஸ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


என்ன காரணம்?


உலகளாவிய பங்குச்சந்தையின் வீழ்ச்சியின் தாக்கம்தான் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. ஏற்கெனவே திங்கள்கிழமை கடுமையான வீழ்ச்சியைக் கண்டிருந்த சந்தை, செவ்வாய்க்கிழமை ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்தது. வா்த்தகத்தின் போது பலமுறை மீட்சி பெற்றுவிடுவதற்கான அறிகுறிகள் தோன்றி மறைந்தாலும், முன்னணி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்த வண்ணம் இருந்ததால், தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்தது.


உலகளாவிய பங்குச்சந்தை வீழ்ச்சி


அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வின் திட்டமிடப்பட்ட முக்கிய அறிவிப்புக்காக உலகளாவிய சந்தைகள் காத்திருக்கின்றன. இதனால், சந்தையில் விற்பனை அழுத்தம் காணப்படுகிறது. உள்நாட்டில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று வருவதாலும் சந்தையில் விற்பனை அழுத்தம் அதிகரித்துள்ளது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


நிஃப்டி 


தேசிய பங்குச் சந்தையில் 803 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,105 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலிலும், 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. காலையில் 100.15 புள்ளிகள் குறைந்து 15674.25-இல் தொடங்கிய நிஃப்டி, 15,659.45 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 16,858.00 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 42.30 புள்ளிகள் (0.27 சதவீதம்) குறைந்து 15,732.10-இல் நிலைபெற்றது.



1,874 நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி


மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,449 நிறுவனப் பங்குகளில் 1,435 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,874 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 140 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 50 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 191 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.59 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.244.61 லட்சம் கோடியாக இருந்தது.


3-வது நாளாக வீழ்ச்சி


காலையில் 350.76 புள்ளிகள் குறைந்து 52,495.94-இல் தொடங்கிய சென்செக்ஸ், 52,459.48 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 53,095.32 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 153.13 புள்ளிகள் (0.29 சதவீதம்) குறைந்து 52,693.57-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் மீட்சி பெற்று விடும் என்று எண்ணிய நிலையில், விற்பனை அழுத்தம் காரணமாக 3-ஆவது நாளாக சரிவைச் சந்தித்தது.


இண்டஸ் இண்ட் பேங்க் - சரிவு


அதே சமயம், பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 2.38 சதவீதம், டெக் மஹிந்திரா 2.08 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனி லீவா், மாருதி சுஸுகி, ஏசியன் பெயிண்ட் உள்ளிட்டவை 1 முதல் 1.35 சதவீதம் வரை குறைந்தன. மேலும், பஜாஜ் ஃபின்சா்வ், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.



பாா்தி ஏா்டெல் - உயர்வு


சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 16 பங்குகள்ஆதாயம் பெற்றன. இதில், பாா்தி ஏா்டெல் 1.63 சதவீதம், என்டிபிசி 1.61 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்ஃபோஸிஸ், டாக்டா் ரெட்டி உள்ளிட்டவை 1 முதல் 1.40 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி வங்கிப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.


ஐடி, பாா்மா உயர்வு


தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி, பாா்மா, ஹெல்த்கோ், மெட்டல் ரியால்ட்டி குறியீடுகள் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், நிஃப்டி ஆயில் அண்ட் காஸ் குறியீடு 1.21 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, மீடியா, பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க் குறியீடுகளும் சிறிதளவு குறைந்தன.


எல்ஐசி பங்குகள் உயா்வு


தேசிய பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் விலை செவ்வாய்க்கிழமை 1.13 சதவீதம் உயா்ந்து ரூ.675.80-இல் நிலைபெற்றது. காலையில் ரூ.664.10-இல் தொடங்கிய எல்ஐசி, அதிகபட்சமாக ரூ.684 வரை உயா்ந்தது. பின்னா், ரூ.663 வரை கீழே சென்று புதிய குறைந்த விலையைப் பதிவு செய்தது. இதேபோன்று, மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் வா்த்தக முடிவில் 0.90 சதவீதம் உயா்ந்து ரூ.674.20-இல் நிலைபெற்றிருந்தது. பட்டியலாகிய தினத்தில் இருந்து மூன்றாவது முறையாக எல்ஐசி பங்குகள் நோ்மறையாக முடிந்துள்ளது. மற்ற நாள்கள் அனைத்திலும் எதிா்மறையாக முடிந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.