மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(Sensex) இன்று காலை வர்த்தகத்திl விர்ரென்று எகிறியது.


இன்று காலை 9.30 மணியளவில் வர்த்தக தொடக்கத்தின்போது சற்று தடுமாறிய சென்செக்ஸ் அடுத்த சில நிமிடங்களிலேயே 57007 புள்ளிகளை அடைந்தது நிஃப்டி 16,988 புள்ளிகள் என்றளவில் உயர்ந்தது. 


முன்னதாக, நேற்று திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தை அதிகளவிலான சரிவை சந்தித்தது. இந்த சரிவுக்கு அமெரிக்காவில் ஏற்பட்டு உள்ள வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து வரும் கொரோனா தொற்று, பொருளாதாரத்தை பாதிக்கும் பணவீக்கம் ஆகியவை காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்க சந்தை வீழ்ச்சியின் காரணமாக ஆசிய சந்தையும் மந்தமான வர்த்தகத்தை பதிவு செய்தது. ஆனால், சர்வதேச சந்தைகளின் நகர்வுகள் ஏற்றம் காண நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டுமே புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தன. நிஃப்டி 225 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,931 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. சென்செக்ஸ் 765 புள்ளிகள் உயர்ந்து 56,889 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.


தொடர்ந்து இன்று மற்றுமொரு புதிய உச்சத்தை சந்தை எட்டியது.


இன்று (ஆகஸ்ட் 31) காலை வர்த்தகத்தில் சற்று தடுமாறிய சென்செக்ஸ் அடுத்த சில நிமிடங்களிலேயே 180.46 புள்ளிகள் உயர்ந்து 57,070.22  புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி 52.20 புள்ளிகள் உயர்ந்து 16,983.25 புள்ளிகள் என்றளவில் உயர்ந்தது. 


இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோ மொபைல் துறை பங்குகள், பொதுத்துறை வங்கிகளில் பங்கு விற்பனை ஏறுமுகம் கண்டுள்ளது. இதுவே இன்றைய புதிய உச்சத்துக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.


இந்த உயர்வு குறித்து சந்தை முதலீட்டு நிறுவனங்கள், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. அதேபோல் இந்திய ஈக்விட்டி சந்தையிலும் கொண்டாட்ட காலம் வந்துவிட்டது என்றே கூறவேண்டும். இந்திய ஈக்விட்டி சந்தைகள் வலுவான நிலையில் உள்ளன என்று தெரிவிக்கின்றன.


அதேபோல், பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், இந்தியப் பொருளாதாரம் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து மீண்டு வருகிரது. இந்த மீட்சி வலுவாக இருக்கிறது. நாட்டில் தடுப்பூசித் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருவதால் நமக்கு மூன்றாவது அலை ஏற்படாமலும் போகலாம். ஒருவேளை ஏற்பட்டாலும் கூட கடுமையான பாதிப்புகள் ஏற்படாது என்ற நிபுணர்களின் கணிப்பு சந்தை தொடர்ந்து காளையின் ஆதிக்கத்தில் இருக்க உதவுகிறது எனத் தெரிவிக்கின்றனர்.


இன்று பிற்பகலில் நாட்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ஜிடிபி தகவல் வெளியாகவுள்ளது. மாநில அளவு லாக்டவுன் ஜிடிபி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரியவரும் என்று கூறியுள்ளனர்.