வறுமைக் கோடு:
வறுமை கோடு என்றால் என்ன , எதனடிப்படையில் வறுமை கோடு வரையறுக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். வறுமைக் கோடு என்பதை, அதாவது வறுமைக்கு கீழ் வாழ்கின்றனர் என்பதை குறிக்க, மாதாந்திர நுகர்வுக்காக, எவ்வளவு செலவினம் செய்கிறார்கள் என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது. அதனடிப்படையில் 2011-12 ஆண்டில் தனிநபர் ஒருவர், கிராமங்களில் வாழ்பவராக இருந்தால், ஒரு மாதத்தில் ரூ.816 கீழ் செலவு செய்பவராக இருக்கும் பட்சத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக கருதப்படுவார். அதே நபர், நகரங்களில் வாழ்பவராக இருந்தால் , ஒரு மாதத்தில் ரூ.1,000 கீழ் செலவு செய்பவராக இருந்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவராக கருதப்படுவார்.
விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு 2022-23 ஆம் ஆண்டில் கிராமங்களில் தனிநபர் மாதாந்திர நுகர்வு செலவு ரூ.1,622 என்றும் நகரங்களில் ரூ.1,999 என்கிற விலை மதிப்பை வைத்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களை எஸ்.பி.ஐ ஆராய்ச்சி பிரிவு கணித்துள்ளது.
வறுமை குறைவு என கணிப்பு:
கிராமங்களில் வாழ்ந்து வருபவர்களில் வறுமைக்கு கீழ் வாழ்ந்து வரும் மக்களின் சதவிகிதமானது குறைந்துள்ளதாக எஸ்.பி.ஐ ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது, அதில் தெரிவித்துள்ளதாவது, 2011-12 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிராமங்களில் 25.7 சதவிகித மக்கள் வறுமைக்கு கீழ் உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், 2022-23 ஆண்டில் 7.2 சதவிகித மக்கள் வறுமைக்கு கீழ் இருப்பதாக கணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் நகரங்களில் ஒப்பிடுகையில், 2011-12 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 13.7 சதவிகித மக்கள் வறுமைக்கு கீழ் உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், 2022-23 ஆண்டில் 4.6 சதவிகித மக்கள் வறுமைக்கு கீழ் இருப்பதாக கணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியா முழுமைக்கும் வறுமைக்கு கீழ் உள்ளவர்களை ஒப்பிடுகையில் 2022-23 ஆம் ஆண்டில் ( 4.5 முதல் 5 ) சதவீதம் வரையிலான நபர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதாக கணித்துள்ளது. மேலும், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் சதவிகிதமானது, மேலும் குறையலாம் எனவும் கணித்துள்ளது.
இடைவெளி குறைவு என கணிப்பு:
கிராமம் மற்றும் நகரங்களில் வாழ்பவர்களின் நுகர்வுக்காக மாதாந்திர செலவின இடைவெளியானது, 2011-12ல் 83.9 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 71.2 சதவீதமாக குறைந்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
தோராயமாக கிராமங்களில் தனிநபர், ஒரு மாதத்தில் 2011-12 ஆண்டில் ரூ.1,430 செலவு செய்ததாகவும், நகரங்களில் ரூ.2,630 செலவு செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
2022-23 ஆண்டில் கிராமங்களில் தனிநபர் தோராய செலவினம் ரூ.3,733 இருந்ததாகவும் நகரங்களில் ரூ.6, 459 இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக, கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள் அமைத்தல், தேசிய நெடுஞ்சாலைகளுடனான இணைப்பு, நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறை உள்ளிட்ட அரசு திட்டங்கள் முக்கிய காரணகள் என்று எஸ்.பி.ஐ ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.