கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர். அத்துடன் அவர்கள் தங்களுடைய பணப்பரிவர்த்தனைகளை பெரும்பாலும் இணையதள முறையிலேயே மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகளவில் ஆன்லைன் மோசடிகள் நடைபெறும் புகார்கள் அதிகம் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து வங்கிகள் அவ்வப்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.


அந்தவகையில் எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளன. இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி சார்பில் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில், "உங்களின் பாதுகாப்பு தான் எங்களுடைய முன்னுரிமை" என்று கூறி ஒரு அறிவுரையை வழங்கியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைல் போன்களில் உரிய இடங்களிலிருந்து மட்டும் புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வேறு எந்த இடங்களிலிருந்தோ அல்லது தெரியாத நபர் கூறும் இடத்திலிருந்தோ செயலிகளை பதிவிறக்கம் செய்யக் கூடாது. 






ஏனென்றால், அப்படி பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள் உங்கள் மொபைல் போனில் பரிவர்த்தனை செய்யும் போது ஏடிஎம் அல்லது கிரேடிட் கார்டு எண், சிவிவி எண், குறுஞ்செய்தி, கடவுச்சொல் மற்றும் ஓடிபி ஆகியவற்றை கண்காணிக்க வாய்ப்பு உள்ளது. அதன்மூலம் உங்களுடைய வங்கி கணக்கில் மோசடி செய்ய வாய்ப்பும் அதிகமாக உள்ளது என்று எச்சரித்துள்ளது. 


இதேபோல் பஞ்சாப் நேஷ்னல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், "வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் உரிய வலைதளத்தில் இருந்து நம்பரை எடுக்க வேண்டும். அப்படி செய்யாமல் வேறு சில வலைதளங்களிலிருந்து நம்பரை எடுத்தாலோ அல்லது அங்கு வரும் லிங்கை கிளிக் செய்தாலோ அது வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு மற்றும் ஆன்லைன் மோசடிக்கு வழி வகுக்கும். அத்துடன் எந்த வலைதளத்திலும் வங்கி தொடர்பான லிங்க் என்று ஒன்று வந்தால் அதை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும்"எனத் தெரிவித்துள்ளது. 


தற்போது அதிகளவில் ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருவதால் வங்கிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. ஏற்கெனவே பல வங்கிகள் அவ்வப்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற அறிவுறுத்தல்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஆன்லைன் மோசடி தொடர்பான புகார்களை சைபர் க்ரைம் (https://cybercrime.gov.in) இணையதளத்தில் அளிக்கவும் வங்கிகள் வலியுறுத்தி வருகின்றன.


மேலும் படிக்க: Facebook Smartwatch | 'இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்' - அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!